உலகம் முழுவதும் அதிகரித்துவிட்டது செல்பி மோகம். எங்கு சென்றாலும், எதைப் பார்த்தாலும் ஒரு செல்பி எடுத்து, அதை சமூக வலைதளங்களில் பதிவிடுவது வழக்கமாகிவிட்டது. அதேசமயம், இந்தந்த இடங்களில்தான் செல்பி எடுக்கவேண்டும் என்ற வரையறையும் இல்லாமல் போய்விட்டது. அந்த வகையில் கேரளாவில் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு, கொல்லப்படும் போது, அங்கிருந்த இளைஞர் ஒருவர் செல்பி எடுத்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில்தான் இந்தக் கொடூரம் நடந்துள்ளது. நேற்று மதியம் அட்டப்பாடி வனப்பகுதியில் உள்ள பழங்குடியின மக்கள் வசிக்கும் காலனியில் இருந்து வந்த மது என்ற இளைஞர், பலசரக்கு கடையில் அரிசி திருடியதாகக் கூறப்படுகிறது. மனநலம் குன்றிய இந்த இளைஞரை மடக்கிப் பிடித்த சிலர், அவர் கட்டியிருந்த கைலியால் கைகளைக் கட்டிப்போட்டு கடுமையாக தாக்கியுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த இளைஞர் ஒருவர், இந்த சம்பவத்தை தனது செல்போனில் செல்பி எடுத்து, அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
கொடூரமாக தாக்கப்பட்ட மது, காவல்துறையினர் மருத்துவனைக்கு அழைத்துச் செல்லும் வழியால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ‘இந்தத் தாக்குதலில் தொடர்புள்ள மூன்று பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்ற செயல்கள் கண்டனத்திற்குரியது. மேம்பட்ட சமூகத்திற்கு இது அழகல்ல. இதை ஒருபோதும் நாம் அனுமதிக்ககூடாது’ என கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
‘ஒருவர் கொடூரமாகத் தாக்கப்படும்போது, அதனைத் தடுக்காமல் கூட்டத்தோடு கூட்டமாக நின்று செல்பி எடுத்துக்கொள்பவர்கள் சமூகத்தில் மிகவும் அபாயகரமானவர்கள்’ என சமூக வலைதளங்களில் பலர் விமர்சித்து வருகின்றனர்.