தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் பரவலாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் நடைபெற்றது.
தொடர்ந்து பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மொத்தம் 925 காளைகள் பரிசோதனை செய்யப்பட்டதில் 836 காளைகள் அனுமதிக்கப்பட்டன.
இந்நிலையில் நேற்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த சிறுவனை பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் ஒருவர் அடித்ததாகக் கூறப்படுகிறது. சிறுவன் வீட்டுக்கு சென்ற நிலையில் தன்னுடைய பெற்றோரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். உடனடியாக அங்கு வந்த சிறுவனின் தாய் மற்றும் உறவினர்கள் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
''ஜல்லிக்கட்டு பார்க்க காலையிலேயே வந்துவிட்டான். இன்னும் சாப்பிடக் கூட வீட்டுக்கு வரல. இவ்வளவு வலியோடு வந்து நிற்கிறான். எனக்கு எவ்வளவு துடிதுடித்திருக்கும். உங்க பிள்ளையாக இருந்தால் இப்படி அடிச்சிருப்பீங்களா?'' என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.