கேரளாவில் அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்தது. கேரள முதல்வர் பினராயி விஜயனும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசும் இரண்டாம் தடவையாக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே பாலின சமத்துவத்தை வளர்க்கும் விதமாகவும், பெண்கள் முன்னேற்றம் தொடர்பாகவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
இந்தநிலையில், பாலின சமத்துவத்தை வளர்க்கும் வகையில் கேரளாவின் பள்ளி பாடப் புத்தகங்களில் திருத்தம் செய்யப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பாலின சமத்துவ கலாச்சாரத்தை வளர்ப்பதற்காக, கேரளாவின் பள்ளி பாடப்புத்தகங்கள் திருத்தப்பட்டு தணிக்கை செய்யப்பட்டு, பெண்களை இழிவுபடுத்தும் சொற்களும், சொற்றொடர்களும் நீக்கப்படும்" என அறிவித்துள்ளார்.
மேலும் "நமது பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைப் பாலின சமத்துவம் மற்றும் சம உரிமைகள் என்ற கருத்தை ஏற்றுக்கொள்ளும் இடங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்" எனவும் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.