குஜராத்தில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 182 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்ட நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. அதேபோல் இமாச்சலப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியும் துவங்கி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ், பாஜக என இருந்த குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச தேர்தல் களம் ஆம் ஆத்மியின் வருகையில் மும்முனைப் போட்டியாக மாறியது.
குஜராத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 92 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். காலை முதல் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகித்து வந்த பாஜக தற்போதைய நிலவரப்படி 156 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் 17 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 5, மற்றவை 4 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. இதன் மூலம் அறுதிப் பெரும்பான்மையாக இந்தத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று 7 வது முறையாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் குஜராத் தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜிக்னேஷ் மேவானி வெற்றி பெற்றுள்ளார். குஜராத்தில் பட்டியலின மக்களுக்கு ஆதரவாக தொடர்ந்து இளம் தலைவராக உருவெடுத்து இருக்கும் இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு உனாவில் நடந்த படுகொலைக்கு எதிராக 2000க்கும் மேற்பட்ட பட்டியலின மக்களை ஒன்றாகத் திரட்டி பேரணி நடத்தி காட்டினார். தொடர்ந்து குஜராத்தில் நடந்த பல சமூக பிரச்சனைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த ஜிக்னேஷ் மேவானி கடந்த 2017 ஆம் ஆண்டு நடைப்பெற்ற குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் வட்கம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு பாஜக வேட்பாளரை தனியாளாக தோற்கடித்து வெற்றி பெற்றார். அந்தத் தேர்தலில் வட்கம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நிறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்த ஜிக்னேஷ் மேவானி கடந்த வருடம் காங்கிரசில் தன்னை இணைத்துக்கொண்டார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் மீண்டும் வட்கம் தொகுதியில் போட்டியிட்ட ஜிக்னேஷ் மேவானி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளரை தோற்கடித்து மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். இதனையடுத்து இதனை அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அப்போது ஜிக்னேஷ் மேவானி புஷ்பா பட ஸ்டையில் தனது வெற்றியை கொண்டாடியுள்ளார்.