இளைஞர் ஒருவர் கிரைண்டருக்குள் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் சுராஜ் நாராயண் யாதவ் (19). இவர் மும்பையில் உள்ள சைனீஸ் ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் சுராஜ் நாராயணன், மஞ்சூரியன் சமைக்க கிரைண்டரில் மூலப்பொருள்களை தயார் செய்து கொண்டிருந்தார். அப்போது, அவரது அணிந்திருந்த சட்டை அந்த கிரைண்டருக்குள் சிக்கிக்கொண்டது. இதையடுத்து, சற்றும் எதிர்பாராதவிதமாக, சுராஜும் அந்த கிரைண்டருக்குள் சிக்கி கிரைண்டருக்குள் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது தொடர்பான சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, ஓட்டலின் உரிமையாளர் சச்சின் கோதகர் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அவர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சுராஜுக்கு அந்த மெஷின் குறித்த எந்தவித முன் அனுபவம் இல்லை என்பது தெரியவந்தது. மேலும், அவருக்கு தகுந்த பயிற்சியும், பாதுகாப்பு உபகரணங்களையும் ஓட்டல் உரிமையாளர் சச்சின் கோதகர் வழங்கவில்லை என்பது தெரியவந்தது.