தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.540 கோடியில் 4.5 லட்சம் கழிவறைகள் கட்டப்பட்டதில் ஊழல் நடந்திருப்பதாக மத்தியப்பிரதேச மாநிலத்தில் புகார் எழுந்துள்ளது.
நாடு முழுவதும் சுகாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவது உள்ள கிராமங்களில் கழிவறைகள் கட்டப்பட்டன. அந்தவகையில் மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கழிவறைகள் கட்டப்படாமலேயே, கணக்கு மட்டும் காட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் 4.5 லட்சம் கழிவறைகள் கட்டப்பட்டதாக ஆவணங்கள், புகைப்படங்கள் ஏன அனைத்தும் அரசாங்கத்திடம் சமர்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஆவணங்கள் கூறும் இடங்களில் கழிவறைகள் கட்டப்படாமல் இருக்கின்றன என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த கழிவறைகள் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட பணமான 540 கோடி ரூபாய் என்ன ஆனது என்பது குறித்தும் விசாரணை நடத்த கோரிக்கைகள் எழுந்துள்ளன.
கிராமவாசிகள் சிலர் தங்கள் பெயரில் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளது தங்களுக்கே தெரியாது என்று பஞ்சாயத்து அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். சுமார் 62 லட்சம் குடும்பங்களின் வீடுகளில் கடந்த அக்டோபர் 2018 ஆம் ஆண்டுக்குள் இந்த கழிவறைகள் கட்டிமுடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் தற்போது வரை பல இடங்களில் அவை கட்டிமுடிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.