Skip to main content

அமித்ஷா அமைச்சகத்தின் முன்பு 15க்கும் மேற்பட்ட திரிணாமூல் எம்.பிக்கள் தர்ணா!

Published on 22/11/2021 | Edited on 22/11/2021

 

tmc mp

 

மேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடித்துள்ள மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ், திரிபுரா மாநிலத்திலும் கட்சியை வளர்க்க கடும் முயற்சிகளில் இறங்கியுள்ளது. இந்தச் சூழலில், அம்மாநிலத்தில் ஆளும் பாஜகவிற்கும், திரிணாமூல் காங்கிரஸுக்கும் தொடர்ந்து மோதல் நடந்துவருகிறது.

 

இந்தநிலையில் நேற்று (21.11.2021), திரிபுரா முதல்வர் பேசிய பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றபோது, அந்தக் கூட்டத்தை திரிணாமூல் காங்கிரஸ் இளைஞரணி தலைவர் சயோனி கோஷ் இடையூறு செய்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து கூட்டத்தில் பாஜக தொண்டர்கள் மீது காரை ஏற்றி கொல்ல முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கொலை முயற்சி, இருவேறு குழுக்களிடையே பகைமையை உருவாக்குதல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

முன்னதாக பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தைத் தாண்டி செல்லும்போது ‘கேலா ஹோப்’ என தான் கத்தும் வீடீயோவை சயோனி கோஷ் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, திரிபுராவின் அகர்தலாவில் உள்ள காவல் நிலையத்தில், பாஜக உறுப்பினர்கள் தங்களது உறுப்பினர்களைத் தாக்கியதாக திரிணாமூல் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. காவல் நிலையத்தின் முன்னரே காவல்துறையின் முன்பாகவே தங்களது தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் திரிணாமூல் காங்கிரஸ் கூறியுள்ளது.

 

இதற்கிடையே, அகர்தலாவின் பகாபன் தாக்கூர் சௌமுனி பகுதியில் உள்ள திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் வழிகாட்டுதல் குழு தலைவர் சுபால் பௌமிக் இல்லத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாஜக குண்டர்கள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக திரிணாமூல் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.

 

இந்தச் சூழலில், திரிபுராவில் தங்களது தொண்டர்களைக் காவல்துறையினர் கொடுமை செய்வதாகக் கூறி, இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் புகாரளிக்க 15க்கும் மேற்பட்ட திரிணாமூல் எம்.பி.க்கள் டெல்லி விரைந்தனர். அவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டிருந்தனர். இந்தநிலையில், தற்போதுவரை நேரம் கிடைக்காததையடுத்து அவர்கள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் வாசலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்