உத்தரப்பிரதேசம், கோவா, பஞ்சாப் , உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி இந்த ஐந்து மாநிலங்களிலும் அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தநிலையில் கோவா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியும் கோவா பார்வேர்டு கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன.
அதேபோல் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன. திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் கோவா மாநில பொறுப்பாளரான மஹுவா மொய்த்ரா, "கோவாவில் பாஜகவை தோற்கடிக்க திரிணாமூல் காங்கிரஸ் அனைத்து முயற்சிகளையும் செய்யும். மம்தா கடந்த காலத்தில் இதை செய்துள்ளார். மேலும் கோவாவில் கூடுதலாக ஒரு மைல் நடக்க தயங்க மாட்டார்" என தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டு காங்கிரஸ்,கோவா பார்வேர்டு கட்சி, மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி ஆகிய கட்சிகளை டேக் செய்துள்ளார்.
அதேபோல் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்துள்ள கோவா பார்வேர்டு கட்சியின் தலைவர் விஜய் சர்தேசாய், "கரோனா கட்டுப்பாடுகள் என்ற போர்வையில், ஜில்லா பரிஷத் தேர்தல்களில் செய்ததைப் போல, எதிர்க்கட்சிகளின் வெற்றியை தடுக்க பாஜக அனைத்தையும் விஷயங்களையும் முயற்சிக்கும். காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி ஆகியவை சேர்ந்த கோவா அணி ஒன்றிணைந்து, வரலாறு மீண்டும் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்" என கூறியுள்ளார்.
இதற்கிடையே கோவா மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ப. சிதம்பரம், "திரிணாமூல் காங்கிரஸின் அறிக்கையை இன்று காலை செய்தித்தாள்களில் படித்தேன், ஆனால் என்னிடம் அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறப்படவில்லை. (கட்சி தலைமையின்) அதிகாரப்பூர்வ வார்த்தைக்காக நாம் காத்திருக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார். இதனால் கோவா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸும், திரிணாமூல் காங்கிரஸும் கூட்டணி அமைக்கலாம் என எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.