உத்தரப்பிரதேசம்,கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான தேதிகளை தேர்தல் அண்மையில் அறிவித்தது. மாநிலத்தில் வரும் பிப்ரவரி 10 ஆம் தேதி முதல், மார்ச் 7 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 3 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய மூன்று மாநிலங்களிலும் பிப்ரவரி 14 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தநிலையில் உத்தரப்பிரதேசம்,கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய நான்கு மாநிலங்களில் வெல்லப்போவது யார் என்பது குறித்து டைம்ஸ் நவ் ஊடகம் கருத்துக்கணிப்பினை வெளியிட்டுள்ளது.
கோவா
கோவா மாநிலத்தில் பாஜக ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளவுள்ளதாக டைம்ஸ் நவ் -வீட்டோ கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. அம்மாநில தேர்தலில் பாஜக 17 -21 இடங்களையும், காங்கிரஸ் 4-6 இடங்களையும் வெல்லும் என தெரிவிக்கும் கருத்து கணிப்பு முடிவுகள், ஆம் ஆத்மி கட்சி 8-11 இடங்களை வெல்லும் என தெரிவிக்கின்றன. கோவா மாநிலத்தில் மொத்தம் 40 சட்டமன்ற தொகுதிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
உத்தரகாண்ட்
உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக பெரும் வெற்றியை ஈட்டும் என டைம்ஸ் நவ் -வீட்டோ கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. அம்மாநிலத்தில் பாஜக 44 முதல் 50 இடங்களையும், காங்கிரஸ் 12 - 15 இடங்களையும், ஆம் ஆத்மி 5-8 இடங்களையும் வெல்லும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. உத்தரகாண்ட் மாநிலத்தின் சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 70 ஆகும்.
பஞ்சாப்
பஞ்சாப் மாநிலத்தை பொறுத்தவரை, அங்கு தொங்கு சட்டமன்றம் ஏற்படும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றும், ஆம் ஆத்மி அதிக இடங்களை வெல்லும் எனவும் டைம்ஸ் நவ் -வீட்டோ கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. கருத்துக்கணிப்பின்படி, ஆம் ஆத்மி 54 -58 இடங்களையும், காங்கிரஸ் 41 முதல் 47 இடங்களையும், பாஜக 1 முதல் 3 இடங்களையும் கைப்பற்றவுள்ளன. மொத்தம் பஞ்சாபில் 117 சட்டமன்ற தொகுதிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
உத்தரப்பிரதேசம்
டைம்ஸ் நவ்-வீட்டோ கருத்துக்கணிப்பின்படி, உத்தரபிரதேசத்தில் பாஜக ஆட்சியை தக்க வைக்கவுள்ளது. அம்மாநிலத்தில் பாஜக 227 முதல் 254 இடங்களை வெல்ல வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. சமாஜ்வாடி கட்சி 136 முதல் 151 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 6 முதல் 11 இடங்களை மட்டுமே வெல்லும் எனவும் அந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. பகுஜன் சமாஜ் 8 முதல் 14 இடங்களை வெல்லும் எனவும் அந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. உத்தரப்பிரதேச மாநிலத்தின் சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 403 ஆகும்.