ஆந்திராவில் ஆட்சி மற்றும் அரசியலின் மற்றொரு அதிகாரமிக்க இடம் திருமலை – திருப்பதி தேவஸ்தானம். ஆயிரக்கணக்கான நிரந்தர மற்றும் தற்காலிக பணியாளர்கள் இங்கு பணியாற்றுகிறார்கள். உலகம் முழுவதிலும் இருந்து வெங்கடேசபெருமாளை தரிசனம் செய்ய தினமும் ஒரு லட்சம் பேர் வருகிறார்கள். உலகின் பணக்கார கடவுள் என போற்றப்படுகிறது திருப்பதி. ஆண்டுக்கு 4 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இங்கு பட்ஜெட் போடப்படுகிறது. இந்தியா முழுவதும் பல பணிகள் தேவஸ்தானத்தால் செய்யப்படுகிறது.

இதனால் இங்கு தங்களுக்கு வேண்டப்பட்டவர்களையே அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவர். சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது, தனது கட்சியை சேர்ந்த கடப்பா நிர்வாகி, புட்டா சுதாகர் யாதவ்வை தேவஸ்தான தலைவராக நியமித்திருந்தார்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் சுதாகர் யாதவ் பதவியை ராஜினாமா செய்ய வைக்கப்பட்டார். அறங்காவலர் குழு கலைக்கப்பட்டது. புதிய அறங்காவலர் குழு தலைவராக முதல்வர் ஜெகனின் சித்தப்பா ஒய்.வி.சுப்பாரெட்டி நியமனம் செய்யப்பட்டார். இன்னும் உறுப்பினர்கள் நியமனம் நடைபெறவில்லை.
தேவஸ்தானத்துக்கு அறங்காவலர் குழு என ஒன்று இருந்தாலும் அதிகாரிகள் அடங்கிய நிர்வாக குழு மிக முக்கியமானது. மனிதனுக்கு இரண்டு கண்களை போல இது. திட்டங்கள் இயற்றுவது அறங்காவலர் குழுவாக இருந்தாலும் அதனை செயல்படுத்துவது நிர்வாக குழு என்பதால் நிர்வாக ரீதியாக தேவஸ்தான தலைமை செயல் அலுவலராக ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியே நியமிக்கப்படுவது தான் நடைமுறை. அந்த பதவியில் அனில்குமார்சிங்கால் என்கிற ஐ.ஏ.எஸ் அதிகாரி இருந்தார். இப்போது அவரை மாற்றிவிட்டு முதல்வர் ஜெகன்மோகனின் மனைவியின் உறவினரான ஐ.ஆர்.எஸ் அதிகாரி தர்மாரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தர்மாரெட்டி வெளியுறவுத்துறையில் பணியில் இருந்தார். அவரை ஆந்திர மாநில பணிக்கு மாற்றி, அவரிடம் திருப்பதி திருமலை தேவஸ்தான நிர்வாக அதிகாரி பணியை ஒப்படைத்துள்ளார் முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி.
ஐ.ஏ.எஸ் சாக உள்ளவர் தான் நியமனம் செய்ய வேண்டும் என்கிற விதியை மீறுவதை முதல்வராக இருந்த அவரது தந்தை ராஜசேகர ரெட்டியிடம் இருந்து கற்றுக்கொண்டார். அவர் முதல்வராக இருந்தபோது இந்த தர்மாரெட்டியை தலைமை செயல் அலுவலராக கொண்டு வந்தார். அதனையே இவரும் செய்கிறார் என விமர்சனம் எழுந்துள்ளது.