இந்தியாவில் முதல்முறையாக 4000 டென்டுகள் கொண்டு 'டென்ட் சிட்டி' அமைக்கப்பட உள்ளது. உத்திர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள கும்பமேளா விழாவிற்காக ப்ரயாக்ராஜ் நகரில் தான் இந்த டென்ட் சிட்டி அமைய உள்ளது. இதற்காக அந்த மாநில அரசானது தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. அதன்படி அரசாங்கமும், தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் நிறுவனங்களும் இணைந்து இந்த பணியை மேற்கொள்ள உள்ளது. இந்த டென்ட் சிட்டியில் 5 நட்சத்திர ஹோட்டல் வசதிகளுடன் கூடிய 4000 டென்ட்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்று மற்றும் இரண்டு படுக்கையறைகள் கொண்ட இந்த டென்ட்கள் தொலைக்காட்சி, வைஃபை போன்ற வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளன. இந்த டென்ட்களை ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 14 ஆம் தேதி தொடங்கி மார்ச் 3 ஆம் தேதி வரை இந்த கும்பமேளா நடைபெற உள்ளது. இதில் சுமார் 25 லட்சம் வெளிநாட்டவர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.