திருப்பதி – திருமலை தேவஸ்தானத்தின் சார்பில் அதிகாரிகள் கூட்டம், சேர்மன் மற்றும் உறுப்பினர்கள் கூட்டம் என மாதம் இரண்டு முறை கூடும். ஏழுமலையான் கோயில் நிர்வாகம், பக்தர்களின் முறையீடுகள் போன்றவற்றை பற்றி கலந்துரையாடுவார்கள். இதுப்பற்றிய செய்திகளை, திருப்பதி திருமலை தேவஸ்தான செய்திகளை தமிழக மக்களுக்கு கூற தமிழகத்தின் பெரும்பாலான தொலைக்காட்சிகள், செய்தித்தாள்கள் அங்கு செய்தியாளர்களை நியமனம் செய்துள்ளது.
திருப்பதி திருமலை தேவஸ்தான செய்திகளுக்கு செய்தியாளர்களை நியமனம் செய்யக்காரணம், திருப்பதிக்கு அதிக அளவு பக்தர்கள் தமிழகத்தில் இருந்தே செல்கிறார்கள். தினசரி சராசரியாக 70 ஆயிரம் முதல் 1 லட்சம் பக்தர்கள் வருகின்றனர். இதில் 40 சதவிதம் பக்தர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள். மீதியுள்ள 60 சதவிதம் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வருகின்றனர். அதோடு, அந்த கோயிலில் தமிழகத்துக்கும் உரிமையுள்ளது. அதனால் அங்கு நடைபெறும் நிகழ்வுகளை தமிழக மக்களுக்கு தெரிவிக்கவே செய்தியாளர்களை நியமித்துள்ளன நிறுவனங்கள்.
தமிழ் பத்திரிகை மற்றும் மீடியாக்களுக்கு சிலச்சில தொந்தரவுகளை தந்து வந்த திருப்பதி திருமலை தேவஸ்தான நிர்வாகம், பிப்ரவரி 29ந்தேதி நடைபெற்ற அறங்காவலர் குழு கூட்டம் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற தமிழக மீடியாக்களை உள்ளே அனுமதிக்காமல் நிறுத்தியுள்ளார் கோயில் பி.ஆர்.ஓ ரவி.
அரங்க கூட்டங்கள் உட்பட அனைத்துக்கும் தெலுங்கு, ஆங்கில மீடியாக்கள், செய்தித்தாள்களுக்கு மட்டும்மே அனுமதி, தமிழக செய்தித்தாள், மீடியாக்களுக்கு இனி அனுமதியில்லை என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக தமிழ் ஊடகத்துறையினர் கேள்வி எழுப்ப பதில் சொல்ல மறுத்துள்ளார். கூட்டம் முடியும் வரை செய்தியாளர்கள் வெளியேவே நின்றுக்கொண்டு இருந்துள்ளனர்.
இந்த கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் நியமிக்கப்பட்டுள்ள இரண்டு உறுப்பினர்கள் கலந்துக்கொண்டுயிருந்தனர். அவர்களும் இதுப்பற்றி கேள்வி எழுப்பவில்லை என்கின்றனர் ஊடகவியாளர்கள்.
திருப்பதி – திருமலை தேவஸ்தானத்தின் சார்பில் திருப்பதி பெருமாள் கோயில் கிளையை கன்னியாகுமரியில் கட்டுவதற்கான அனைத்து உதவிகளையும் செய்கிறது தமிழகரசு. ஆனால் திருப்பதி திருமலையில் தமிழ் ஊடகத்தினரை துரத்துகிறது அந்நிர்வாகம்.