
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று (07.07.2021) விரிவாக்கம் செய்யப்படுகிறது. இன்று மாலை ஆறு மணிக்குப் புதிய அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அமைச்சரவை விரிவாக்கத்தில் புதிதாக சிலர் அமைச்சராவார்கள் எனவும், சில அமைச்சர்களின் துறைகள் மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் சிலர் அமைச்சரவையிலிருந்து நீக்கப்படுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில், கல்வித்துறை அமைச்சராக இருந்த ரமேஷ் நிஷாங்க் போக்ரியால், தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த சந்தோஷ் கங்வார் ஆகியோர் தங்கள் பதவியை இராஜினாமா செய்துள்ளனர். சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த ஹர்ஷ்வர்தனும் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
மேலும், மத்திய இணையமைச்சராக இருந்த சிலரும் தங்கள் பதவியை இராஜினாமா செய்தனர். இந்தநிலையில் பிரதமர் மோடி, நாடாளுமன்ற பாஜக உறுப்பினர்களைத் தற்போது சந்தித்து உரையாடிவருகிறார். இந்தச் சந்திப்பில் புதிதாக அமைச்சர் பதவியை ஏற்கவுள்ளர்வர்களும் கலந்துகொண்டுள்ளனர். இந்தச் சந்திப்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் இராஜ்நாத் சிங் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.