/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/pak-army-art_0.jpg)
ஜம்மு - காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த 22ஆம் தேதி (22.04.2025) பயங்கரவாதக் கும்பல் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியது. இதில் 26 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இந்தியா மட்டுமல்ல பல்வேறு நாட்டுத் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, பஹல்காம் உள்ளிட்ட ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு தீவிர கண்காணிப்பில் இந்திய ராணுவப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அதோடு ராணுவத்தினர் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை நடத்தி வருகின்றனர். காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளைப் பிடிக்க ட்ரோன் கேமராக்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. மேலும் ஹெலிகாப்டர்கள் மூலம் மலைப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாகப் பயங்கரவாதிகளுக்கும், இந்திய ராணுவப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. மற்றொருபுறம் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் சில இடங்களில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று (25.04.2025) சிறிய ரகத் துப்பாக்கிச் சூடுகளை நடத்தியிருந்தது. இதற்கு இந்திய ராணுவத்தின் சார்பில் திறம்படப் பதிலடி கொடுக்கப்பட்டது.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் நல்வாய்ப்பாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இத்தகைய பரபரப்பான சூழலில் தான் இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி விரைவில் ஸ்ரீநகருக்குச் சென்றிருந்தார். இத்தகைய சூழலில் தான் பந்திபோரா பகுதியில் தொடர்ந்து 4வது நாளாக நேற்று பயங்கரவாதிகளை ராணுவத்தினர் தீவிரமாகத் தேடி வந்தனர். அப்போது அங்குப் பதுங்கியிருந்த லஷ்கர் - இ - தொய்தா இயக்கத்தைச் சேர்ந்த டாப் காமாண்டர் சுட்டுக்கொல்லப்பட்டடார். மேலும் ஆதில் குரி மற்றும் ஆசிப் ஷேக் என்ற இரு பயங்கரவாதிகளின் வீடுகளையும் இந்திய ராணுவத்தினர் தகர்த்தனர்.
இந்நிலையில் எல்லைக்கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் 2வது நாளாக இன்றும் (26.04.2025) துப்பாக்கிச்சூடு நடத்தியிருந்தது. இருப்பினும் பாகிஸ்தான் ராணுவத்திற்குத் தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாக இந்திய ராணுவத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதாக கூறப்படுகிறது. அதே வேளையில் பக்ஹல்காம் தாக்குதல் சம்பவத்தில் பயங்கரவாதிகளுக்கு உதவிய 2 பேரை எல்லைப் பாதுகாப்புப்படையினர் கைது செய்துள்ளனர். குல்காம் மாவட்டத்தில் பதுங்கியிருந்த போது கைது செய்யப்பட்டனர். பயங்கரவாதியுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஒருவரின் வீட்டையும் ராணுவத்தினர் அடித்து நொறுக்கினர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)