
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து காஷ்மீருக்குச் சுற்றுலாச் சென்ற பயணிகள் மீது கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாத கும்பல் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில், 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். தாக்குதல் நடத்திய பாகிஸ்தானில் செயல்பட்டு வருவதால் பாகிஸ்தானுக்கு எதிரான அதிரடி முடிவுகளை இந்தியா எடுத்துள்ளது.
இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் வெளியேற வேண்டும், இந்தியா - பாகிஸ்தான் எல்லை மூடல், இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் மே 1ஆம் தேதிக்குள் வெளியேற வேண்டும், சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட அதிரடி முடிவுகளை இந்தியா எடுத்தது. இந்தியா எடுத்த நடவடிக்கைக்கு எதிராக, வான்வெளி பகுதியை இந்திய விமானங்கள் பயன்படுத்த தடை, இந்தியா உடனான சிம்லா ஒப்பந்தம் ரத்து, எல்லை மூடல் உள்ளிட்ட முடிவுகளை பாகிஸ்தான் எடுத்தது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே போர் சூழும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், சிம்லா ஒப்பந்தம் கையெழுத்தான வரலாற்றுச் சிறப்புமிக்க மேசையில் இருந்த பாகிஸ்தான் கொடி அகற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1971ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போருக்குப் பிறகு, இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை மீட்டெடுப்பதற்கும், அமைதியை நிலைநாட்டுவதற்கும் அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி மற்றும் பாகிஸ்தான் அதிபர் சுல்ஃபிகார் அலி பூட்டோ ஆகியோரால் கடந்த 1972இல் ‘சிம்லா ஒப்பந்தம்’ போடப்பட்டது.
இருநாட்டு பிரதமர்களும் சிம்லா ஒப்பந்தத்திற்குக் கையெழுத்திட்ட அந்த மர மேசை, தற்போது இமாச்சலப் பிரதேச ராஜ்பவனின் கீர்த்தி ஹாலில் இருக்கிறது. அந்த மேசையில், இரு தலைவர்களும் கையெழுத்திட்ட போது எடுக்கப்படும் புகைப்படங்களும், ‘சிம்லா ஒப்பந்தம் இங்கு 3-7-1972 அன்று கையெழுத்தானது’ என்று எழுதப்பட்ட தகடும் இருக்கிறது. மேலும், அந்த மேசையில் இந்தியா - பாகிஸ்தான் கொடியும் இருந்தது. இந்த நிலையில், அங்கிருந்த பாகிஸ்தான் கொடி மேசையில் இல்லை என்று ராஜ்பவன் அதிகாரிகள் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.