மக்களவைத் தேர்தலோடு ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது. இதில் ஒடிசா மாநிலத்தில் ஆட்சியிலிருந்த பிஜூ ஜனதா தளம் கட்சியை வீழ்த்தி முதல் முறையாக பா.ஜ.க ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் கோட்டையாக இருந்த ஒடிசா மாநிலத்தில் 1990 ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சியே நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பிலிருந்த பிஜு பட்நாயக், அம்மாநிலத்தில் முதல்வராக பணியாற்றி வந்தார்.
இதனையடுத்து பிஜு பட்நாயக், ஜனதா தளம் கட்சியில் இணைந்து, 1995 ஆம் ஆண்டில் முதல்வராக பொறுப்பு வகித்து வந்தார். பிஜு பட்நாயக் மறைவுக்குப் பிறகு, அவருடைய மகன் நவீன் பட்நாயக், பிஜு ஜனதா தளம் என்ற கட்சியை தொடங்கினார். அதன் பின்பு கடந்த 2000 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் நவீன் பட்நாயக் அமோக வெற்றி பெற்று அம்மாநில முதல்வரானார். இத்தகைய சூழலில் தான் 147 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் 51 இடங்களை மட்டுமே கைப்பற்றி தோல்வியடைந்தது. பா.ஜ.க 78 இடங்களிலும், காங்கிரஸ் 14 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1 இடங்களிலும், சுயேட்சை 1 இடங்களிலும் வென்றது.
இதனையடுத்து பாஜக சார்பாக ஒடிசாவின் சட்டப்பேரவைக் கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் புவனேஸ்வரில் நேற்று (11.06.2024) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்களும், பாஜக மேலிட பார்வையாளர்களுமான ராஜ்நாத் சிங் மற்றும் பூபேந்தர் யாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தின் முடிவில் ஒடிசாவில் பாஜக சட்டமன்றக் கட்சியின் தலைவராக மோகன் சரண் மாஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த மோகன் மாஜி கியோஞ்சர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து வெற்றி பெற்றவர் ஆவார்.
இந்நிலையில் ஒடிசா மாநில முதலமைச்சராக மோகன் சரண் மாஜி இன்று (12.06.2024) பதவியேற்றார். இவ்விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதன்முறையாக ஒடிசாவில் பாஜக தலைமையிலான அரசு பதவியேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மோகன் சரண் மாஜிக்கு ஒடிசா ஆளுநர் ரகுபர் தாஸ் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். அதனைத் தொடர்ந்து பிரவதி பரிதா, கனக் வர்தன் சிங் தியோ ஆகியோர் ஒடிசா மாநில துணை முதலமைச்சர்களாக பதவியேற்றனர்.
மேலும் முதல்வர் மோகன் சரண் மஜி தலைமையிலான அமைச்சரவையில் சுரேஷ் பூஜாரி, ரபிநாராயண் நாயக், நித்யானந்தா கோண்ட், க்ருஷ்ண சந்திர பத்ரா, கோகுல நந்தா மல்லிக், சம்பத் குமார் ஸ்வீன், கணேஷ் ராம் சிங் குந்தியா, சூர்யபன்ஷி சூரஜ் மற்றும் பிரதீப் பாலசமந்தா ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர். முதல்வர் மோகன் சரண் மஜியின் பதவியேற்பு விழா முடிந்ததும், ஒடிசா மாநில முன்னாள் முதல்வரும், பிஜேடி தலைவருமான நவீன் பட்நாயக்குடன் பிரதமர் மோடி சிறிது நேரம் உரையாடினார்.