இஸ்லாமியர்களின் முக்கிய புனித தலங்களில் ஒன்றாக மெக்கா உள்ளது. இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் உள்ள இஸ்லாமியர்கள் ஒவ்வொரு ஆண்டும் புனித ஹஜ் பயணம் மேற்கொண்டு வருகின்றன. ஹஜ் புனித பயணத்தின் போது மெக்காவில் இருந்து ஜம் ஜம் கிணற்று நீரை எடுத்து வருவதை இஸ்லாமியர்கள் வழக்கமாக வைத்துள்ளனர். மெக்காவுக்கு சேவை அளிக்கும் ஏர் இந்தியாவின் இரண்டு விமானங்களில் ஜம் ஜம் நீரை எடுத்து வர தடை செய்யப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அறிவிப்பினை திரும்ப பெறுவதாகவும், புனித பயணிகளுக்கு ஏற்பட்ட அசவுகரியத்துக்கு வருந்துவதாகவும் ஏர் இந்தியா விளக்கம் அளித்துள்ளது. மெக்கா பயணம் மேற்கொண்ட இரு ஏர் இந்தியா விமானங்களில் கூடுதலாக 5 கிலோ வரை கொண்டு வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கூடுதல் அனுமதி பயணிகள் கொண்டு வரும் கைப்பை சுமைகளுக்கு பொருந்தாது என ஏர் இந்தியா இன்று வெளியிட்ட விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.