பீகார் எல்லைப்பகுதியில் இந்தியர்கள் மீது நேபாள போலீஸார் மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
இந்தியாவுக்குச் சொந்தமான லிபுலேக், கலாபானி, லிம்பியாதுரா உள்ளிட்ட பகுதிகளை நேபாள எல்லைக்குள் உள்ளடக்கி அந்நாட்டு அரசு அண்மையில் புதிய வரைபடம் ஒன்றை வெளியிட்டது. நேபாளத்தின் இந்தச் செயல் ஒருதலைபட்சமானது என இந்திய வெளியுறவுத்துறை எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இவ்விவகாரம் தற்போது இருநாட்டு உறவில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சிக்கலை அடுத்து இந்தியா மீது அடுக்கடுக்கான விமர்சனங்களை வைத்து வருகிறார் நேபாள பிரதமர். இந்நிலையில் கடந்த மாதம் பீகார் எல்லைப்பகுதியில் நேபாள போலீஸார் நடத்திய துப்பாக்கிசூட்டில் இந்தியர்கள் பலியாகினர். இதனைத்தொடர்ந்து தற்போது பீகார் எல்லைப்பகுதியில் நேபாள போலீஸார் மீண்டும் இந்தியர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர்.
பீகாரில் எல்லையோர மாவட்டமாக கிருஷ்ணகஞ் பகுதியில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த நேபாள போலீஸார் இன்று காலை அப்பகுதியில் இருக்கும் இந்தியர்கள் ஒருசிலரை குறிவைத்து துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். இந்தத் துப்பாக்கிசூட்டில் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் எல்லைப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக கிருஷ்ணகஞ் போலீஸார் தெரிவித்துள்ளனர்.