கர்நாடக முதல்வர் சித்தராமையா மகன் யதீந்திரா அதிகாரிகளின் பணியிட மாற்றத்திற்குப் பணம் வசூலிப்பதாக கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி தொடர்ந்து குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து வந்தார். இந்நிலையில் இதற்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா மறுப்பு தெரிவித்துள்ளார்.
மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் அண்மையில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. அந்த வீடியோ காட்சியில் நிகழ்ச்சி ஒன்றில் செல்போனில் யாருடனோ பேசிக்கொண்டிருக்கும் சித்தராமையாவின் மகன் யதீந்திரா, பணம் கேட்டு பேரம் பேசுவது போன்ற வீடியோ இடம்பெற்றிருந்தது. இந்த வீடியோ காட்சி வெளியாகி கர்நாடகா அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
வெளியான வீடியோவில் பேசும் யதீந்திரா, ‘அப்பா... விவேகானந்தா என்பவர் எங்கே. மகாதேவிடம் நான் 5 எண்ணிக்கை பட்டியல் கொடுத்துள்ளேன். அவரிடம் தொலைபேசியை தாருங்கள். நான் கொடுத்ததை தவிர்த்து வேறு ஏதேதோ வருகிறது. இதை யார் தந்தார்கள் நான் கொடுத்ததை மட்டும் செய்யுங்கள்' என பணியிடம் மாற்றம் குறித்து பேசுவதாக அந்த வீடியோ இடம்பெற்றுள்ளது.
சித்தராமயாவின் ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளதால் அவர் முதல்வர் பதவியிலிருந்து விலக வேண்டும் என குமாரசாமி வலியுறுத்தியுள்ளார். இந்த நிலையில் இதற்கு விளக்கம் அளித்துள்ள சித்தராமையா 'கார்ப்பரேட் சமூக பொறுப்பு நிதி எந்தெந்த திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து மட்டுமே இந்த வீடியோவில் பேசுகிறார். நானும் பார்த்தேன். நீங்கள் வீடியோவை நன்றாக பாருங்கள். ஏதாவது ஒரு இடத்திலாவது பணி மாற்றம் குறித்தோ, பணம் குறித்தோ அவர் பேசியுள்ளாரா? இதனை பணியிட மாற்றத்திற்கு தொடர்பு ஏற்படுத்தினால் எப்படி? அரசாங்கத்தில் பணியிட மாற்றம் என்பது மிகவும் சாதாரண நிகழ்வு. 1984 ஆம் ஆண்டு முதல் முறையாக அமைச்சராக பதவி ஏற்றேன். எனது இத்தனை வருட அரசியல் பயணத்தில் ஏதாவது ஒரு இடத்தில் நான் பணம் பெற்றுக் கொண்டு பணியிட மாற்றம் செய்தேன் என்று நிரூபித்தால் அரசியலை விட்டு வெளியேற தயார்' என்று தெரிவித்துள்ளார்.
தீபாவளி தினத்தன்று குமாரசாமி வீட்டை வண்ண விளக்குகளால் அலங்கரிக்க, மின்சாரம் திருடப்பட்டதாக காங்கிரஸ் ஆதாரத்துடன் குற்றம் சாட்டியதோடு, போஸ்டர்கள் ஒட்டி இருந்தது. இந்த விவகாரத்தை திசை திருப்பவே குமாரசாமி இதுபோன்ற ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டை பரப்பி வருவதாக கர்நாடகா காங்கிரசினர் தெரிவித்து வருகின்றனர்.