ஸ்ரீநகரில் கல்வீச்சில் காயமடைந்ததாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 11 ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த நிலையில், அந்த சிறுவனை பெல்லட் குண்டுகள் தாக்கியதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை அடுத்து, அந்த பகுதியில் கடந்த சில வாரங்களாக பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் ஆகஸ்ட் 6ம் தேதி ஷெர் இ காஷ்மீர் மருத்துவ விஞ்ஞான கழகத்தில் அஸ்ரர் அஹமட் என்ற 11 ஆம் வகுப்பு மாணவன் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அந்த சிறுவன் மருத்துவமனையிலேயே உயிரிழந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கல்வீச்சில் காயமடைந்துதான் அந்த சிறுவன் உயிரிழந்ததாக காவல்துறையினர் கூறி வரும் நிலையில், அந்த சிறுவன் உடலில் பெல்ட் குண்டுகளால் தாக்கப்பட்ட அடையாளங்கள் இருப்பதாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மருத்துவமனை ஆவணங்களின்படி அஸ்ரர் அகமெட் ஆகஸ்ட் 6ம் தேதி இரவு 6.46 மணிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உடனடியாக எக்ஸ்-ரே எடுக்கப்பட்டது அதில் தலை, கண் ஆகியவற்றில் பெல்லட் குண்டுகள் பாய்ந்தது தெரியவந்துள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது. மரணத்திற்கான சரியான காரணம் கண்டறியப்படாத நிலையில், எக்ஸ்ரே முடிவின்படி தலை, கண் உட்பகுதியில் பெல்லட் குண்டுகள் தாக்கப்பட்ட அடையாளம் காணப்பட்டதாக தெரிகிறது. ஆனால் இந்த அறிக்கைக்கு போலீசார் மறுப்பு தெரிவித்துள்ளனர். ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்கு பின்னர் யாருமே கலவரத்தால் உயிரிழக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.