புதுச்சேரி சட்டமன்றத்தில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கைகள் மீது உறுப்பினர்கள் விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய உறுப்பினர்கள், ‘துணை நிலை ஆளுநர் ஒப்புதல் அளித்த கோப்புகள் மீது தலைமைச் செயலாளர் உரிய நடவடிக்கைகள் எடுப்பதில்லை. அவரை மாற்ற வேண்டும்' என ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தினர்.
இதற்கு பதில் அளித்த முதல்வர் ரங்கசாமி, "தலைமைச் செயலாளரின் செயல்பாடுகள் சங்கடமாக உள்ளது. எத்தனை கோப்புகள் எல்லாம் சரியாக வரவில்லை என்ற பிரச்சனை உள்ளது. என்னால் இதை வெளிப்படையாக சொல்ல முடியவில்லை. உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியவில்லை. படிப்படியாக நடவடிக்கை எடுப்பேன்" என உறுதியளித்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், "அரசு ஊழியர்கள் வாங்கும் ஊதியத்திற்கு ஒழுங்காக வேலை செய்ய வேண்டும். கல்வித்துறையில் ரொட்டி, பால் ஊழியர்களின் சம்பளத்தை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். சுகாதாரத்துறையின் கீழ் பணியாற்றும் ஆஷா பணியாளர்களுக்கு ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக ஊதியம் உயர்த்தி வழங்கப்படும். காரைக்காலில் 30 ஆயிரம் சதுரடியில் 50 படுக்கைகள் கொண்ட ஆயூஷ் மருத்துவமனை தொடங்கப்படும்” என்று கூறினார்.
புதுச்சேரியில் உள்ள அனைத்து கடற்கரைகளுக்கும் வரும் வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கடற்கரையில் உரிய பாதுகாப்பு இல்லாமல் குளிப்பதால் அதிகளவு உயிரிழப்பு ஏற்பட்டு வருவதாகவும் அரசு இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
இதற்கு பதிலளித்து பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் லெட்சுமி நாராயணன், "புதுச்சேரி கடற்கரைகளில் குளிப்பவர்கள் உயிர்காக்கும் கவசம் (Life Jacket) அணிந்தால் தான் கடற்கரையில் குளிக்க அனுமதிக்கப்படும் என்ற சட்டம் விரைவில் கொண்டு வரப்படும்" என தெரிவித்தார்.