காந்த பண்புகளை கொண்ட மர்ம விண்கல் ஒன்று கடந்த 22 ஆம் தேதி பிஹாரில் உள்ள கிராமம் ஒன்றில் விழுந்துள்ளது. தற்போது அதனை அம்மாநில நவீன அருங்காட்சியகத்தில் வைக்க அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 22 ஆம் தேதி பீகாரின் லாகாஹி பகுதியில் உள்ள மஹாதேவா கிராமத்தில் விண்கல் ஒன்று விழுந்துள்ளது. விண்வெளியிலிருந்து வயல்வெளியில் உரத்த சத்தத்துடன் படுவேகமாக வந்து விழுந்த அந்த விண்கல் மண்ணில் புதைந்துள்ளது. இதனை பார்த்த அங்கிருந்த விவசாயிகள் உடனடியாக அங்கு சென்று பார்த்துள்ளனர்.
பின்னர் அந்த இடத்தை தோண்டி மண்ணிற்குள் சென்ற விண்கல்லை வெளியே எடுத்துள்ளனர். சுமார் 13 கிலோ எடை கொண்ட இந்த விண்கல் காந்த பண்புகளை கொண்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த கல் விழுந்த இடத்தில் 5 அடி ஆழத்தில் பள்ளம் உண்டானது. தோண்டியெடுக்கப்பட்ட இந்த விண்கல் முதலில் மாவட்டக் கருவூலத்தில் வைக்கப்பட்டது.
பின்னர் முதல்வர் நிதிஷ்குமாரின் அறிவுறுத்தலின்படி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. விரைவில், நிபுணர்களின் ஆய்வுக்காகவும் அதன் உண்மைத் தன்மையைக் கண்டறியவும் தலைநகரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா அறிவியல் மையத்திற்கு விண்கல் மாற்றப்படும் என்று கூறப்படுகிறது.