
“நா அப்படி சொல்லவே இல்ல...” எனக்கூறி கையெடுத்து கும்பிட்ட துணைக் குடியரசுத் தலைவர், போற போக்க பாத்தா என் மேலேயே ACTION எடுப்பிங்க போல என்று நாடாளுமன்றத்தில் பேசியது பிரதமர் மோடி உள்ளிட்ட எம்.பி.க்களை குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்துள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற கூட்டத்தொடர், கடந்த ஜனவரி 31 ஆம் தேதியன்று ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து 2023 - 24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டையும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்நிலையில், ஹிண்டன்பெர்க் ஆய்வு நிறுவனம் அதானி குழுமத்தின் பங்குச்சந்தை மோசடிகள் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தேசிய அரசியலிலும் பேசுபொருளாக மாறியுள்ளது. மேலும், இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் செய்தனர். இதனால் நாடாளுமன்ற இரு அவைகளும் கடும் அமளியை சந்தித்து வருகிறது.
இத்தகைய காரசாரமான சூழலில், கடந்த 8 ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் பேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஆளும் பாஜக அரசுக்கு எதிராக பல்வேறு கேள்விகளை முன்வைத்தார். அதுமட்டுமின்றி, அதானி விவகாரம் தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
அப்போது, பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்த கார்கே, திடீரென துணைக் குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் பக்கம் திரும்பினார். அவரைப் பார்த்து, “நீங்க ஒரு பெரிய லாயர். எங்கிட்ட சொன்ன விஷயத்த எல்லாருக்கும் சொன்னிங்களா” என மல்லிகார்ஜுன கார்கே கேட்டவுடன், உடனே குறுக்கிட்ட ஜகதீப் தன்கர், “நா உங்ககிட்ட எவ்வளவோ விஷயம் சொல்லியிருக்கேன். அத பத்தி இங்க பேசுறது சரியா இருக்காது” என சிரித்தபடி கூறினார். அதற்கு பதிலளித்த கார்கே, “சரி அத விடுங்க... நா வேற ஒண்ணு சொல்றேன். நீங்க ஆரம்பத்துல லாயரா இருக்கும்போது, பணத்த கையால எண்ணிட்டு இருந்திங்க. ஆனா இப்போ மெஷின்ல எண்ணிக்கிட்டு இருக்கேன். அப்படினு என்கிட்ட சொன்னிங்களே அதாவது ஞாபகம் இருக்கா?” என சிரித்தபடி கேட்டுவிட்டார்.
அதற்கு ஜகதீப் தன்கர், “நா அப்படி சொல்லவே இல்ல... என கையெடுத்து கும்பிட்டு, போற போக்க பாத்தா... என் மேலேயே நாடாளுமன்ற கூட்டுக்குழுவ அமைச்சிடுவாங்க போல” என கிண்டலாக கூறினார். இதைக் கேட்ட பிரதமர் மோடியும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் குலுங்கி குலுங்கி சிரித்தனர். மேலும், இதுதொடர்பான வீடியோ காட்சி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
- சிவாஜி