ஆந்திர பிரதேசம் மாநிலம், விசாகப்பட்டினத்தில் எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் இருந்து சரக்கு ஆட்டோ மூலம் வாஷிங் மிஷின்கள் ஏற்றி விஜயவாடாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், விசாகப்பட்டினத்தில் இருந்து விஜயவாடாவுக்கு ஹவாலா பணம் கடத்தி செல்வதாக விசாகப்பட்டினம் விமான நிலைய காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், நேற்று (25-10-23) விமான நிலைய காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, சரக்கு ஆட்டோவில் வாஷிங் மிஷின்கள் கொண்டு செல்வதை பார்த்த காவல்துறையினர், அந்த வாகனத்தை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். இதில் 6 வாஷிங் மிஷின்கள் புதிதாக ‘சீல் பிரிக்காமல்’ காணப்பட்டது.
இதுகுறித்து சரக்கு ஆட்டோ ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், விசாகப்பட்டினத்தில் இருந்து விஜயவாடாவுக்கு கொண்டு செல்வதாக கூறினார். இதில் சந்தேகமடைந்த விமான நிலைய காவல்துறையினர், 6 வாஷிங் மிஷின்களையும் கீழே இறக்கி சோதனை செய்து திறந்து பார்த்தனர். அதில் கட்டுக்கட்டாக பணம் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. மொத்தம் வாஷிங் மிஷின்களில் ரூ.1.30 கோடி பணமும், 30 புதிய செல்போன்களும் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அதில் இருந்த பணம் மற்றும் சரக்கு ஆட்டோவையும் பறிமுதல் செய்த காவல்துறையினர், கடை உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், பணத்திற்கு உண்டான உரிய ஆவணங்கள் இல்லாததால் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.