Skip to main content

“நாட்டின் வளர்ச்சிக்கு நிலையான ஆட்சி முக்கியம்” - பிரதமர் மோடி பேச்சு!

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
Stable governance is important for the development of the country  PM Modi speech

ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாஜக தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது. அதே சமயம் தொடர்ந்து 3வது முறையாக பாஜக ஆட்சி அமைத்தாலும் அடுத்த 5 ஆண்டுகளுக்குக் கூட்டணிக் கட்சிகளின் பிடியில் தான் ஆட்சி இருக்கப்போகிறது. இதற்கிடையே குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் அறிவிப்பின்படி மக்களவையின் தற்காலிக சபாநாயகராக பர்த்ருஹரி மஹ்தப் நியமிக்கப்பட்டார். புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்பிக்களுக்கு தற்காலிக சபாநாயகர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார் எனவும், எம்பிக்கள் பதவியேற்ற பிறகு மக்களவையின் புதிய சபாநாயகருக்கான தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிப்பு வெளியாகி இருந்தது.

இத்தகைய சூழலில் தான் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டணி அரசு மூன்றாவது முறையாகப் பொறுப்பேற்ற பின் முதல்முறையாக இன்று (24.06.2024) காலை 11 மணிக்கு நாடாளுமன்றம் கூடுகிறது. இதன் மூலம் 18வது மக்களவையின் முதல் அமர்வு இன்று தொடங்குகிறது. இதனையொட்டி, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 280 எம்பிக்கள் இன்று பதவியேற்க உள்ளனர். மேலும் நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது தற்காலிக சபாநாயகர் தேர்வு, நீட் தேர்வு முறைகேடு குறித்த பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. 

Stable governance is important for the development of the country  PM Modi speech

இதனையடுத்து 18வது மக்களவையின் தற்காலிக சபாநாயகராக ஒடிசாவைச் சேர்ந்த பாஜக எம்பி பர்துஹரி மஹ்தாப்க்கு குடியரசுத் தலைவர் முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பர்த்ருஹரி மஹ்தாபுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். 8 முறை எம்பியாக இருக்கும் காங்கிரஸ் கட்சியின் கொடுக்குன்னில் சுரேஷ்க்கு பதிலாக 7 முறை எம்பியாக இருக்கும் பர்துஹரியை இப்பதவிக்கு நியமனம் செய்தததைக் கண்டித்து இந்தியா கூட்டணி எம்பிக்கள் பதவியேற்பு விழாவை புறக்கணித்தனர். இந்த விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர், பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் முதல் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக பிரதமர் மோடி, நாடாளுமன்றத்திற்கு வந்தடைந்தார். அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அதில், “நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இது ஒரு புகழ்பெற்ற நாள். சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக நமது சொந்த புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் பதவியேற்பு விழா நடக்கிறது.

Stable governance is important for the development of the country  PM Modi speech

இந்தக் குறிப்பிடத்தக்க நாளில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்.பி.க்களுக்கும் நான் மனமார்ந்த வரவேற்பைத் தெரிவித்துக் கொள்கிறேன், அவர்களுக்கு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். எங்களுடைய நோக்கம், செயல்பாடு ஆகியவற்றுக்காகவே 3 வது முறையாக மக்கள் வாய்ப்பளித்தனர். நாட்டுக்கு சேவை செய்யவும், 140 கோடி மக்களின் கனவை நனவாக்கவும் எம்.பி.க்கள் பாடுபட வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு நிலையான ஆட்சி முக்கியம்” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்