Skip to main content

“பாஜக மஹாராஷ்ட்ரா மக்களை அவமானப்படுத்திவிட்டது”- சிவசேனா தலைவர் ஆவேசம்

Published on 11/11/2019 | Edited on 11/11/2019

மஹாராஷ்ட்ராவில் அமைச்சரவை அமைப்பதில் காங்கிரஸ், பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் என முக்கிய கட்சிகள் அனைத்திற்கும் மத்தியில் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றாலும் இன்னும் இழுபறியே நீடித்து வரும் நிலையில் 9 ஆம் தேதியுடன் பாஜக ஆட்சியின் காலம் முடிந்தது. இந்த சூழ்நிலையில் 8ஆம் தேதி  மகாராஷ்ட்ரா முதல்வர்  பதவியை தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா செய்தார்.
 

sanjay rawat

 

 

இதனையடுத்து மகாராஷ்ட்ராவில் ஆட்சியமைக்க பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ்க்கு ஆளுநர் பகத்சிங் கோஸ்யாரி அழைப்பு விடுத்திருந்த நிலையில், ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தாலும் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் பாஜக இருப்பதால் மகாராஷ்ட்ராவில் நாங்கள் ஆட்சி அமைக்கப் போவதில்லை என மகாராஷ்ட்ரா பாஜக தலைவர் சந்திரகாந்த் தெரிவித்துள்ளார். மகாராஷ்ட்ர ஆளுநர் பகத்சிங் கோஸ்யாரியை சந்தித்த பிறகு, சிவ சேனாவுடன் இணைந்து பணியாற்ற மக்கள் எங்களுக்கு வாய்ப்பளித்துள்ளனர். மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளிக்காமல் காங்கிரஸ், என்சிபியுடன் சிவசேனா ஆட்சி அமைத்தால் அவர்களுக்கு வாழ்த்துக்கள் என அவர் தெரிவித்துள்ளார். 
 

இந்நிலையில் மகாராஷ்ட்ராவில் சிவசேனா கட்சி ஆட்சி அமைக்க விருப்பமா என ஆளுநர் மாளிகை கேட்டுள்ளது. 56இடங்களை பெற்ற இரண்டாவது தனிப்பெரும் கட்சியான சிவசேனாவுக்கு ஆளுநர் மாளிகை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ளது. அதேபோல் பாஜக உடன் கூட்டணி இல்லை என சிவசேனா அறிவித்தால் ஆதரவு பற்றி முடிவு எடுக்கப்படும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் நவாப் மாலிக் பேட்டியளித்திருந்தார்.
 

இந்நிலையில் இன்று காலை சிவசேனாவை சேர்ந்த மத்திய கனரக தொழில்கள், பொதுத்துறை நிறுவனத்துறை அமைச்சர் அரவிந்த சாவத் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதனையடுத்து பாஜக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அவர் அவர் கட்சிக்குள் முக்கிய தலைவர்களைகொண்டு ஆலோசனை செய்து வருகிறது. 
 

இந்நிலையில் சிவசேனாவின் மாநிலங்களவை தலைவர் சஞ்சய் ராவத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “மஹாராஷ்ட்ராவில் அரசாங்கத்தை உருவாக்காமல் போனதற்கு பாஜகவின் பிடிவாதமே காரணம். அவர்கள் மஹாராஷ்ட்ராவை சேர்ந்த மக்களை அவமானப்படுத்திவிட்டார்கள். அவர்கள் எதிர் கட்சியாககூட போவேன் ஆனால் எங்களுக்கு சரிக்கு சமமாக உரிமை கொடுக்க மாட்டோம் என்கிறார்கள். 
 

ஆளுநர் எங்களுக்கு அதிக நேரம் கொடுத்தால் பெரும்பான்மையை நிருபித்து அரசாங்கத்தை அமைப்போம். பாஜகவிற்கு மட்டும் அரசாங்கத்தை அமைக்க 72 மணிநேரம் கெடு விதித்தனர். ஆனால், எங்களுக்கு அதைவிட குறைவாகவே கொடுத்திருக்கின்றனர். இது குடியரசு ஆட்சியை இங்கு அமல்படுத்த ஒரு யுக்தியாகவே நாங்கள் பார்க்கிறோம்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்