Prajwal Revanna Affair Karnataka govnt is serious in the arrest process

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது. அதாவது தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொண்டதாகப் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது. அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தப் புகார் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டு இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதன்படி பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் பிரஜ்வால் ரேவண்ணா மீதான பாலியல் வன்கொடுமை புகாரை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. இத்தகைய சூழலில் ஆபாச வீடியோக்கள் தொடர்பான புகாரில் பிரஜ்வல் ரேவண்ணா மீது சிறப்பு தணிக்கை குழு புதியதாக வழக்கைப் பதிவு செய்தது. அதோடு ஹொலேநரசிபுராவில் உள்ள வீட்டிலேயே தன்னை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வன்கொடுமை செய்ததாக மதச் சார்பற்ற ஜனதாதள கட்சியின் பெண் கவுன்சிலர் புகார் அளித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் முன்பு ஆஜராகி பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமைக்கான சட்டப்பிரிவும் எஃப்.ஐ.ஆரில் கூடுதலாக சேர்க்கப்பட்டது. இந்நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாடு தப்பிச் சென்றுள்ள நிலையில் அவருக்கு எதிராக விமான நிலையங்களுக்கு 2 வது லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பிரஜ்வல் ரேவண்ணாவின் தந்தை எச்.டி. ரேவண்ணா வீட்டில் பாதிக்கப்பட்ட பெண்ணை அழைத்து வந்து சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வெளிநாடு தப்பிச் சென்றுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய சிபிஐ ப்ளூ கார்னர் நோட்டீஸ் வழங்க வேண்டும் என கார்நாடக மாநில சிறப்பு புலானாய்வுக் குழு (S.I.T) கோரிக்கை வைத்துள்ளது.

Advertisment

Prajwal Revanna Affair Karnataka govnt is serious in the arrest process

முன்னதாக பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கடிதம் எழுதியுள்ளார். அதில், “இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசின் சார்பில் சாத்தியமான அனைத்து ஆதரவையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த கொடூரமான குற்றங்களுக்கு காரணமான அனைத்து தரப்பினரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை உறுதிசெய்யும் கடமை அனைத்துக் கட்சியினருக்கும் உள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.