கர்நாடகா மாநிலம், பெங்களூர் கேஆர் மார்க்கெட் பகுதியில் சமீபத்தில் 37 வயது பெண் ஒருவர் தன்னை 2 ஆண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கர்நாடகாவில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு போய்விட்டதாக ஆளும் காங்கிரஸ் அரசை, எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில், கர்நாடகா மாநிலத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை வழக்குகள் தொடர்பாக அம்மாநில முதல்வர் சித்தராமையா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பேசிய கர்நாடகா முதல்வர் சித்தராமையா,“பாஜக ஆட்சிக் காலத்தில் எந்த பாலியல் வன்கொடுமை வழக்குகளும் நடக்கவில்லையா?. பாலியல் வன்கொடுமை நடக்கக்கூடாது. பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும், ஆனால் சமூகத்தில் எப்போதும் தீய சக்திகள் இருக்கும். அவர்களுக்கு எதிராக நாங்கள் கடுமையாக செயல்படுவோம். மகாத்மா காந்தியால் உருவாக்கப்பட்ட சமத்துவம், நல்லிணக்கம் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் ஆகிய கொள்கைகளை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டியது அவசியம்” என்று பேசினார்.
சித்தராமையாவின் கருத்துக்கு மாநில எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சரின் பதிலுக்கு பா.ஜ.க எம்எல்ஏ அஸ்வத் நாராயண் தெரிவித்துள்ளதாவது, “பாலியல் வன்கொடுமை குறித்து அவர் என்ன வகையான நியாயத்தை கூறுகிறார்? யாருக்கும் அஞ்சாமல் மாநிலத்தில் கொள்ளை, கொள்ளை நடக்கிறது. சட்டம் ஒழுங்கு இல்லை” என்றார்.