
மகாராஷ்டிரா மாநிலம், புனே பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர் ஷிலிம்கர் (32). இவர் விவசாய மற்றும் மணல் ஒப்பந்ததாரராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இவர் தனது மனைவியை தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 2012 ஜூலை 16ஆம் தேதி ஷிலிம்கர் வீட்டிற்கு பன்றி இறைச்சியைக் கொண்டு வந்து தனது நண்பர்களுக்கு சமைத்து தருமாறு மனைவியிடம் கூறியுள்ளார். இதனை, அவரது மனைவி மறுத்துள்ளார். இதனால், இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஷிலிம்கர், தனது மனைவி மற்றும் இளைய மகளை இரவு முழுவதும் நிர்வாணமாக வீட்டிற்கு வெளியே நிற்கும்படி கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதில் மனமுடைந்த மனைவி, இந்த சம்பவம் குறித்து தனது குடும்பத்தினருக்கு தொலைப்பேசியில் தெரிவித்துள்ளார். அடுத்த நாள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண், வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷிலிம்கரை கைது செய்து விசாரணை நடத்தினர். வழக்கு விசாரணையின் போது, ஷிலிம்கர் குற்றவாளி எனக் கண்டறிந்த செஷன்ஸ் நீதிமன்றம் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து ஷிலிம்கர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு விசாரணையின் போது ஷிலிம்கர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த மரணத்திற்கு தகுந்த ஆதாரம் இல்லை எனவும், இறந்தவரை தற்கொலைக்கு தூண்டும் நோக்கம் இல்லை எனவும் வாதிட்டார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம், ஷிலிம்கருக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்கியது.