ஜம்மு காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்தில் பாதல் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஏராளமான பேர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த கிராமத்தில் வசித்து வந்த முகமது அஸ்லாமின் குடும்பத்தினருக்கு காய்ச்சல், வலி, வாந்தி, கடுமையான வியர்வை மற்றும் சுயநினைவு இழப்பு போன்ற பாதிப்புகள் இருந்துள்ளது. இதன் காரணமாக, மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சை பெற்று வந்தனர். சிகிச்சை பெற்று வந்த சில நாட்களிலேயே சிகிச்சை பலனின்றி, முகமது அஸ்லாம் மற்றும் அவரது 6 குழந்தைகள் உள்பட 8 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.
அது மட்டுமல்லாமல், அந்த கிராமத்தில் வசித்து வந்த மற்ற இரண்டு குடும்பங்களுக்கும் இத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். ஒரே கிராமத்தில், 3 குடும்பங்களைச் சேர்ந்த 17 பேர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மத்திய உள்துறை அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட 11 பேர் கொண்ட குழுவினர், அந்த கிராமத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்தாண்டு டிசம்பர் 7 முதல் ஜனவரி 19ஆம் தேதி வரையுள்ள இடைப்பட்ட காலத்தில் 17 பேர் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதால் அந்த கிராமத்தைச் சுற்றியுள்ள பல கிராமங்களும் பீதி அடைந்துள்ளது. மேலும், அந்த பகுதிகளுக்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு, கிராம மக்களை அரசு விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.