பா.ரஞ்சித் மற்றும் அருண் பாலாஜி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பாட்டல் ராதா’. இப்படத்தில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய், மாறன், ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் முன்னதாக வெளியாகியிருந்தது. இந்த நிலையில் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. அதன் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் அமீர், வெற்றிமாறன். மிஸ்கின், லிங்குசாமி உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். இப்படம் வருகிற ஜனவரி 24ஆம் தேதி வெளியாகவுள்ளது. மதுவிற்கு அடிமையான ஒருவரின் வாழ்க்கைய மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.
நிகழ்வில் பா.ரஞ்சித் கலந்து கொண்டு பேசுகையில், படக்குழுவினர் குறித்து நிறைய விஷயங்களை பகிர்ந்தார். அப்போது தனக்கு தற்கொலை செய்யும் எண்ணம் வந்ததாக கூறி எமோஷ்னலாக பேசினார். அவர் கூறியதாவது, “நான் 12த் படிக்கிறப்போ தனியா ஒரு நைட் தற்கொலை செய்யலாம் என யோசித்தேன். ஏனென்றால் அங்க அம்மா கஷ்டப்பட்டு அழுதுகொண்டே இருப்பாங்க. அதை என்னால் பார்க்கவே முடியாது. அது என்னை பயங்கரமாக எமோஷனலாக்கி விட்டது. அதனால் அந்த ஸ்டேஜூக்கு போய்விட்டேன். அது யாருக்கும் தெரியாது. யாரிடமும் ஷேர் செய்தது இல்லை.
அது எவ்வளவு கொடுமையானது என்று நேரடியாக பார்த்து அனுபவச்சிருக்கேன். அதை தினகரன் ஸ்கிரிப்ட்டாக எழுதியதை பார்த்து ஆச்சரியப்பட்டேன். படத்தில் வரும் அஞ்சலை கதாபாத்திரம் தான் எங்க அம்மா. என்னுடைய ஆசை என்னவென்றால் என் அம்மா கஷ்டப்பட்ட மாதிரி என் பொண்டாட்டி கஷ்டப்படக்கூடாது, என் பிள்ளைங்க கஷ்டப்படக் கூடாது. ஊரில் திருவிழா என்றால் எல்லார் வீடும் சந்தோஷமா இருக்கும். எங்க அப்பாவும் எங்களை சந்தோஷமாகத் தான் பார்த்துப்பார். ஆனால் குடி என்று வரும்போது அவரை அவரே இழந்துவிடுவார். கடைசி காலத்தில் வாழனும் என நினைத்தார். நான் இந்த இடத்துக்கு வந்தப் பிறகு இன்னும் கொஞ்சம் காலம் வாழ ஆசைப்படுகிறேன் என சொன்னார். அது ஒரு கவலையான விஷயம். அப்போதுதான் தற்கொலை செய்யும் எண்ணம் தோன்றியது. அதில் இருந்து எப்படி மீண்டு வந்தேன் என தெரியவில்லை. அதன் பிறகு வெளியூரில் வந்துவிட்டதால் மீண்டேன் என நினைக்கிறேன்” என்றார்.