இந்தியாவில் தற்போது நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகச் சில தினங்களாகத் தகவல் வெளியாகி வருகின்றது. அதை உறுதி செய்யும் விதமாக உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிகாரிகளை அழைத்து சில தினங்களாக ஆலோசனை செய்து வருகிறார். குறிப்பிட்ட சில வட மாநிலங்களில் இந்த நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தற்போதே மின் வெட்டு ஏற்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நிலக்கரி தட்டுப்பாடு தொடர்பாகக் கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா மத்திய அரசு மீது சந்தேகம் கிளப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது, " இந்தியாவில் தற்போது நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது இயற்கை முறையில் ஏற்பட்டதா அல்லது செயற்கையாக ஏற்படுத்தப்பட்டதா என்று முதலில் தெரிய வேண்டும். கர்நாடகத்தில் இதுவரை நிலக்கரி தட்டுப்பாடு ஏற்படவில்லை. மாநிலத்தில் மின் உற்பத்தி, தேவையை விட அதிகமாக உள்ளது. மின் உற்பத்தியைத் தனியாருக்கு விடும் நோக்கில் செயற்கையாக நிலக்கரி தட்டுப்பாடு ஏற்படுத்தக்கூடாது. அவ்வாறு செய்தால் அது மிகப்பெரிய தவறு, மின் உற்பத்தி நிலையங்களைத் தனியாருக்கு விற்கக் கூடாது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் துயரம் ஏற்படும். மின்துறை தனியாருக்குக் கொடுக்கப்பட்டால் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மின்சாரம் நிறுத்தப்படும்" என்றார்.