கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக தன்னை 64 பேர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பட்டியலின சிறுமி ஒருவர் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலத்தில் மகிளா சமக்யா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு, பல்வேறு வகைகளில் பாதிக்கப்படும் குழந்தைகளை தங்களது கவனத்திற்கு கொண்டு வந்து அவர்களுக்கு உரிய தீர்வை கொடுக்கும். அந்த வகையில், அமைப்பின் வழக்கமான களப்பயணத்தின் போது, 18 வயதான பட்டியலின சிறுமி ஒருவர் தனக்கு நேர்ந்த கொடுமைகளை எடுத்துக் கூறியுள்ளார்.
தனது 13 வயதில் தனது பக்கத்து வீட்டார், ஆபாசப் படங்களை அனுப்பி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், பள்ளியில் நடந்த விளையாட்டின் போது பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு அது சம்பந்தமான வீடியோக்கள் பரப்பப்பட்டதாகவும் என 64 பேர் மீது பாலியல் குற்றச்சாட்டை அந்த பட்டியலின சிறுமி தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த அமைப்பு, இது குறித்து பத்தினம்திட்டா மாவட்ட குழந்தைகள் நலக் குழுவிடம் புகார் அளித்தது.
அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து இதுவரை, 10க்கும் மேற்பட்டோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து போலீஸ் தரப்பில் தெரிவிப்பதாவது, சிறுமி 8ஆம் வகுப்பில் இருந்து சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கின்றனர். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.