மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள கோந்த்வா பகுதியில் 9 வயது சிறுவன், 3 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், இரண்டு குழந்தைகளின் குடும்பமும் ஒரே தெருவில் அக்கம்பக்கத்தினராக நீண்ட காலம் வசித்து வருகின்றனர். பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட அந்த சிறுவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து கொண்டிருக்கிறான். அந்த சிறுமி, இந்த சிறுவனை ‘அண்ணா’ என்று அழைத்து வந்துள்ளார்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி தனியாக இருக்கும் போது, அந்த சிறுவன் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளான். தனக்கு நேர்ந்த கொடுமையை பாதிக்கப்பட்ட குழந்தை, தனது அம்மாவிடம் தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, குழந்தைகள் உரிமைக்காக பணியாற்றும் தனியார் தொண்டு நிறுவனத்தில் அந்த சிறுமியை ஒப்படைத்து விசாரணை நடத்தினர். அதில் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் அந்த சிறுமி கூறியுள்ளார். அதனை தொடர்ந்து, அந்த சிறுவனை சிறார் நீதி வாரியத்தில் கட்டுப்பாட்டில் வைத்து விசாரணை நடத்தினர். அதில், சமூக வலைத்தளத்தின் தாக்கத்தால் தான் இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளதாக அதிர்ச்சி தகவலை அந்த சிறுவன் கூறியிருக்கிறார். இதையடுத்து, அந்த சிறுவனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.