இந்தியாவில் அரசியல் சாசனம் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் நாடாளுமன்றத்தில் உள்ள இரு அவைகளிலும் கடந்த 4 நாட்களாக சிறப்பு விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் முடிவில் மாநிலங்களவையில், நேற்று (17-12-24) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். அப்போது அவர், “அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என்று சொல்வது இப்போது ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்கு பதிலாக, கடவுளின் பெயரை இவ்வளவு சொல்லியிருந்தால், அவர்களுக்கு சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும். அம்பேத்கரின் பெயரை காங்கிரஸ் எடுத்துக்கொள்வதில் பா.ஜ.க மகிழ்ச்சியடைகிறது. ஆனால் அவர் மீதான உண்மையான உணர்வுகள் குறித்தும் கட்சி பேச வேண்டும்” என்று பேசினார்.
அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அமித்ஷா பேசியிருந்ததற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, வயநாடு எம்.பி பிரியங்கா காந்தி, திமுக எம்.பி டி.ஆர்.பாலு உள்ளிட்ட இந்தியா கூட்டணியினர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கண்டனம் தெரிவித்து கையில் அம்பேத்கர் புகைப்படம் ஏந்தி நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். மேலும், அவர்கள் ‘ஜெய் பீம்’ என்று முழக்கமிட்டு வந்தனர். எதிர்க்கட்சிகள், அமித்ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வந்ததால், நாடாளுமன்றத்தில் உள்ள இரு அவைகளும் இன்று (18-12-24) 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்ற வளாகத்தில் வெளியே செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “பாபாசாகேப் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர், நாட்டிற்கு வழிகாட்டிய சிறந்த மனிதர். அவர் இழைத்த அரசியல் சாசனத்தை அவமதிப்பதையோ, அவமதிப்பதையோ நாடு பொறுத்துக் கொள்ளாது. உள்துறை அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர்கள் அரசியலமைப்புக்கு எதிரானவர்கள். அரசியல் சட்டத்தை மாற்றுவோம் என்று முன்பே கூறியிருந்தார்கள். அவர்கள் அம்பேத்கருக்கும் அவரது சித்தாந்தத்திற்கும் எதிரானவர்கள். அவர்களின் முழு வேலையும் அம்பேத்கரின் பங்களிப்பையும் அரசியலமைப்பையும் முடித்து வைப்பதே. இது நாடு முழுக்க தெரியும்” என்று கூறினார்.