உத்தரப்பிரதேச மாநிலத்தில், நேபாள எல்லையில் அமைந்துள்ளது சித்தார்த்நகர் மாவட்டம். இந்த மாவட்டத்தைச் சேர்ந்த இருபது பேருக்கு ஏப்ரல் முதல் வாரத்தில், அம்மாவட்ட ஆரம்பச் சுகாதார நிலையத்தில் கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதன்பிறகு அந்த இருபது பேரும் தடுப்பூசியின் இரண்டாவது டோஸை செலுத்திக்கொள்ள மே 14 அன்று ஆரம்பம் சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்கு கோவிஷீல்டின் இரண்டாவது டோஸுக்கு பதிலாக கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்தவிவகாரம் கிட்டத்தட்ட 10 நாட்களுக்குப் பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ள சித்தார்த்நகரின் தலைமை மருத்துவ அதிகாரி, இந்த சம்பவத்திற்கு மருத்துவ பணியாளர்களின் அசட்டுத்தனமே காரணம் என்றும், இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு, தன்னிடம் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளதாகவும், தவறுக்கு காரணமானவர்களிடம் விளக்கம் கேட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர், "தடுப்பூசி தவறுதலாக மாற்றிச் செலுத்தப்பட்டவர்களை எங்கள் மருத்துவக் குழு சந்தித்துள்ளது. அவர்கள் நலமாக இருக்கிறார்கள். யாருக்கும் எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை" எனக் கூறியுள்ளார்.
அதுநேரத்தில் தடுப்பூசி மாற்றிச் செலுத்தப்பட்டவர்களில் ஒருவரான ராம் சூரத் என்பர், சுகாதாரத்துறையிலிருந்து யாரும் தங்களை வந்து பார்க்கவில்லை எனக் கூறியுள்ளார். இதுகுறித்து அவர், "ஏப்ரல் 1 ஆம் தேதி எனக்கு கோவிஷீல்ட்டின் முதல் டோஸ் செலுத்தப்பட்டது. இரண்டாவது தடுப்பூசி மே 14 அன்று செலுத்தப்பட்டது. நான் எனது இரண்டாவது டோஸை செலுத்திக்கொள்ளச் சென்றபோது. யாரும் எதையும் சரிபார்ப்பது குறித்துக் கவலைப்படவில்லை. கோவிஷீல்டிற்கு பதிலாக எனக்கு கோவாக்சின் செலுத்தப்பட்டது. எனக்கு பயமாக இருக்கிறது. நான் கவலையடைந்துள்ளேன். இந்த சம்பவம் தொடர்பாக யாரும் என்னை வந்து பார்க்கவில்லை" எனத் தெரிவித்துள்ளார். ஒரே நேரத்தில் 20 பேருக்கு கரோனா தடுப்பூசிகள் மாற்றிச் செலுத்தப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் வெளிநாட்டுத் தடுப்பூசிகளைக் கொண்டு நடந்த ஓர் ஆய்வின் முடிவு, முதல் டோஸாக ஒரு தடுப்பூசியையும், இரண்டாவது டோஸாக வேறொரு தடுப்பூசியையும் செலுத்திக்கொள்வது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது எனத் தெரிவிக்கிறது. ஆனால், எந்தநாட்டிலும் இதுவரை தடுப்பூசிகளை மாற்றிச் செலுத்த அனுமதி வழங்கப்படவில்லை. அதேபோல் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசிகளை மாற்றிச் செலுத்துவது தொடர்பாக எந்த ஆய்வு முடிவும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.