Skip to main content

“சமூகத்தைப் பிளவுபடுத்தும் நோக்கத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளது” - ராகுல் காந்தி வேதனை

Published on 25/04/2025 | Edited on 25/04/2025

 

Rahul Gandhi anguished says pahalgam incident was carried out with the intention of dividing the society

காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது கடந்த 22ஆம் தேதி பயங்கரவாதிகள் கொடூரமாகத் தாக்குதல் நடத்தினர். பஹல்காம் பகுதியில் நடந்த இந்த தாக்குதலில், 26 சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதல் நடத்திய, பயங்கரவாதிகளை தேடும் பணியில் இந்திய பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதே வேளையில், தாக்குதலில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த நிலையில், காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தாக்குதலுக்குள்ளானவர்களை, மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி இன்று (25-04-25) நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இது தொடர்பாக ராகுல் காந்தி கூறியதாவது, “பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் ஒரு பயங்கரமான சோகம். நிலைமையைப் புரிந்து கொண்டு உதவுவதற்காக நான் இங்கு வந்துள்ளேன். ஜம்மு காஷ்மீரின் அனைத்து மக்களும், இந்த கொடூரமானத் தாக்குதலைக் கண்டித்து, நாட்டை முழுமையாக ஆதரித்துள்ளனர். தாக்குதலில் காயமடைந்த ஒருவரை நான் சந்தித்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவிக்கிறேன். முழு நாடும் அவர்களுடன் ஒற்றுமையாக இருக்கும் என்பதை அனைவருக்கும் உறுதியளிக்க விரும்புகிறேன். 

நேற்று அரசுடன் நாங்கள் ஒரு சந்திப்பை நடத்தினோம். அதில், ஒருங்கிணைந்த எதிர்க்கட்சி இந்த தாக்குதலைக் கண்டித்து அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்க விரும்பினாலும் அதற்கு எங்களுக்கு முழு ஆதரவை தருவதாக உறுதியாகக் கூறினோம். இந்த தாக்குதலின் பின்னணியில் உள்ள நோக்கம் சமூகத்தைப் பிளவுபடுத்துவதும், சகோதரனை சகோதரனுக்கு எதிராக நிறுத்துவதும் ஆகும். இது போன்ற நேரத்தில், ஒவ்வொரு இந்தியரும் ஒற்றுமையாக இருந்து ஒன்றாக நிற்பது மிகவும் முக்கியம். 

இதன் மூலம், பயங்கரவாதிகளின் சதியை நாம் முறியடிக்க முடியும். நாட்டின் பிற பகுதிகளில் சிலர், காஷ்மீரில் உள்ள நமது சகோதர சகோதரிகளைத் தாக்குவது வருத்தமளிக்கிறது. நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து ஒன்றாக நின்று கொடூரமாகத் தாக்குதலுக்கு எதிராக போராடி பயங்கரவாதத்தை தோற்கடிப்பது அவசியம். நான் முதலமைச்சரையும் லெப்டினண்ட் கவர்னரையும் சந்தித்தேன். என்ன நடந்தது என்று அவர்கள் என்னிடம் சொன்னார்கள். நானும் காங்கிரஸ் கட்சியும் முழு ஆதரவை தருவோம் என்று அவர்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்