உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் நடைபெற்று வருகிறது. இது தற்போது நிறைவடையும் தறுவாயில் உள்ளது. இந்தக் கோயில் வரும் ஜனவரி மாதம் 22ம் தேதி திறக்கப்படவிருக்கிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், கோயில் அறக்கட்டளை சார்பில் சமீபத்தில் மொத்தம் 7 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல், ராமர் கோயில் அமைவதற்கு ஆதரவாக இருந்த பத்திரிகையாளர்களுக்கும், ராமர் கோயிலுக்காகப் பாடுபட்ட 50 கரசேவகர்களின் குடும்பத்தினருக்கும், குறைந்தபட்சம் 50 நாடுகளில் இருந்து தலா ஒரு பிரதிநிதிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கும் பிரதமர் மோடி, கோவில் கருவறையில் வைக்கப்பட உள்ள ராமர் சிலையை எடுத்து வந்து வழங்கவுள்ளதாகவும், அதன்பின்பு அந்த சிலைக்கு பூஜை செய்து கருவறையில் வைக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், பிரதமர் மோடி சிலையைத் தொட்டு எடுத்து வருவதால் கோவில் திறப்பு விழாவைப் புறக்கணிப்பதாக பூரி மடத்தின் சங்கராச்சாரி சுவாமி நிச்சலானந்தா சரஸ்வதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாகப் பேசிய அவர், “அயோத்தியில் நடக்கும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் நான் பங்கேற்க போவதில்லை. பிரதமர் மோடி கடவுள் ராமர் சிலையை தொட்டு பிரதிஷ்டை செய்யும்போது நான் கைதட்டிக் கொண்டாட வேண்டுமா? ராமர் சிலை பிரதிஷ்டையில் கண்ணியம் மீறப்படுவதை என்னால் பார்க்க முடியாது; இது கலாச்சாரத்திற்கு எதிரானது. ராமர் சிலை பிரதிஷ்டை சாஸ்திரத்தின்படி நடக்க வேண்டும்; கோவில் விவகாரத்தில் அரசியல் தொடரக்கூடாது” எனக் காட்டமாக தெரிவித்துள்ளார்.