நான்கு விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்ட லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவுசெய்து விசாரித்துவருகிறது. இந்த வழக்கில் உத்தரப்பிரதேச அரசு, வன்முறை தொடர்பான தற்போதைய நிலையை அறிக்கையாகத் தாக்கல் செய்திருந்தது.
அதனைத்தொடர்ந்து முன்பு சிலமுறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சாட்சிகளை விசாரிக்காமல் இந்த வழக்கில் முன்னோக்கி செல்ல முடியாது எனக் கூறி, சாட்சிகளைப் பாதுகாத்து, அதிகம் பேரை விசாரிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
இந்தநிலையில், இந்த வழக்கு இன்று (08.11.2021) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள், வன்முறை தொடர்பான நிலை அறிக்கையில், மேலும் சாட்சியங்கள் விசாரிக்கப்படுகின்றனர் என்பதைத் தவிர எதுவும் இல்லை என்றும், விசாரணையின் வேகம் எதிர்பார்த்த அளவு இல்லை என்றும் அதிருப்தி தெரிவித்தனர்.
தொடர்ந்து ஆஷிஷ் மிஸ்ராவை தவிர மற்ற குற்றவாளிகளின் மொபைல் ஃபோன்கள் பறிமுதல் செய்யப்படாதது ஏன் என்றும், மற்ற குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் மொபைல் ஃபோன்களைப் பயன்படுத்தவில்லையா என கேள்வி எழுப்பினர். அதுமட்டுமன்றி ஒரு குறிப்பிட்ட முறையில் சாட்சியங்களின் வாக்குமூலத்தை பதிவுசெய்வது, குறிப்பிட்ட குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு சாதகமாக இருப்பதுபோல் இருப்பதாகவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், வன்முறை சம்பவம் தொடர்பாக பதியப்பட்ட வெவ்வேறு தகவல் அறிக்கைகளின் சாட்சிகள் கலந்திருப்பதற்கு அதிருப்தி தெரிவித்ததோடு, வன்முறை குறித்து நடத்தப்படும் விசாரணையைக் கண்காணிக்க உத்தரப்பிரதேச அரசால் அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை என தெரிவித்தனர். மேலும், இந்த விசாரணையை பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற நீதிபதிகளான ராகேஷ் குமார் ஜெயின் அல்லது நீதிபதி ரஞ்சித் சிங் மேற்பார்வை செய்யலாம் என கூறிய நீதிபதிகள், இதுகுறித்து பதிலளிக்குமாறு கூறி வழக்கை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.
அலகாபாத் உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்த நீதிபதி ஒருவரை, வன்முறை குறித்த விசாரணையைக் கண்காணிக்கும் தனிநபர் ஆணையமாக நியமித்திருந்தது குறிப்பிடத்தக்கது.