40 வருடங்களாக இந்திய கிரிக்கெட் அணியில் யாராலும் முறியடிக்க முடியாத கபில்தேவ் சாதனை ஒன்றை இலங்கைக்கு எதிரான போட்டியில் ரிஷப் பண்ட் முறியடித்துள்ளார்.
இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் போட்டிகளில் ஆடி வருகிறது. முதல் டெஸ்டில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த இந்திய அணி 252 ரன்னுக்குள் ஆட்டமிழந்த நிலையில், அடுத்து களமிறங்கி இலங்கை அணி இந்திய அணியின் பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 102 ரன்னுக்குள் சுருண்டது. இந்நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை துவங்கியுள்ள இந்திய அணி சற்றுமுன் வரை 199 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 342 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் மூன்று நாட்கள் ஆட்டம் மீதி இருக்கும் நிலையில், இந்தியா இந்த ஆட்டத்தில் வெற்றிபெற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த ஆட்டத்தில் களமிறங்கிய இந்திய அணியின் அதிரடி வீரர் ரிஷப் பண்ட், டெஸ்ட் போட்டியை ஒருநாள் ஆட்டம் போல் நினைத்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 28 பந்துகளில் அவர் அரை சதம் எடுத்து இந்திய அளவில் குறைந்த பந்துகளில் மிக வேகமாக அரைசதம் எடுத்த கபில்தேவ்வின் சாதனையை அவர் இன்று முறியடித்தார். முன்னதாக 1982ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கபில்தேவ் 30 பந்துகளில் அரை சதம் அடிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.