மத்திய அரசு ஆகஸ்ட் 3, 2023 அன்று இந்தியாவில், மடிக்கணினி இறக்குமதித் தடையை அமல்படுத்தியது. இதில் மடிக்கணினி, கணினி, டேப்லேட் உள்ளிட்ட ஏழு எலக்ட்ரானிக் பொருட்களின் இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டது. மேலும், இந்த விரைவான தடையானது, மடிக்கணினி, டேப்லெட்டுகள் மற்றும் பிற எலக்ட்ரானிக் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு முன், இறக்குமதியாளர்கள் உரிமத்தைப் பெற வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதற்கு இந்தியாவில் எலக்ட்ரானிக் பொருட்களான லேப்டாப், டேப்லேட் போன்ற பொருட்களின் தேவை அதிகமாக இருப்பதால் லேப்டாப் இறக்குமதி தடையை நிறுத்துமாறு பலர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதற்கு விளக்கம் அளித்த மத்திய அரசு, ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் மூலம் இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்றுவதற்காக முதற்கட்டமாக இந்த திட்டத்தை அமல்படுத்த இருக்கிறோம். அதுமட்டுமல்லாமல், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மடிக்கணினிகளுடன் தொடர்புடைய பிற பொருட்களில் ஏற்படுகின்ற அபாயத்தை குறைப்பதற்கு இந்த திட்டம் உதவும். மேலும், இந்தியாவில் மின்னணு சாதனங்களின் உற்பத்தியை அதிகப்படுத்தி, அதன் மூலம் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை அதிகப்படுத்தலாம் என்று தெரிவித்திருந்தது.
இதனிடையில், இந்த அறிவிப்பில் வெளிநாட்டில் இருந்து இந்த பொருட்களை இறக்குமதி செய்வதற்கான உரிமம் 31 அக்டோபர் 2023 வரை நீட்டிக்கப்பட்டு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், இறக்குமதி செய்வதற்கான தடை உத்தரவு நவம்பர் 1, 2023 முதல் அமலுக்கு வரும் என்று வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ஜியோ நிறுவனம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி அன்று மிகக் குறைந்த விலையில் ஜியோ மடிக்கணினியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த லேப்டாப் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கடைகளில் விற்பனைக்கு வரும் என அறிவித்திருந்தது. குறைந்த விலையான ரூ.16,499 ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்ட இந்த மடிக்கணினி மாணவர்கள் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் மத்தியில் இந்த ஜியோ மடிக்கணினி கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த நிலையில், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், எதிர்க்கட்சிகள் அனைவரும் மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என்று கூறி நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான விவாதங்கள் இன்றும் நாளையும் விவாதிக்கப்படவுள்ளன. அதனைத் தொடர்ந்து நாளை மறுநாள்(10.8.2023) பிரதமர் மோடி விளக்கமளிக்கவுள்ளார்.
அதன்படி இன்று நடந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் விவாதத்தில் மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராய் மத்திய அரசின் லேப்டாப் இறக்குமதி தடையையும், ஜியோ நிறுவனத்தின் லேப்டாப் அறிமுகம் குறித்தும் பேசினார். நாடாளுமன்றத்தில் பேசிய எம்.பி, சவுகதா ராய், “டாட்டா, அதானி, அம்பானி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு இந்தியாவில் கூடுதலான நன்மைகள் நடக்கின்றன. இதில், அதானிக்கு அதிகப்படியான விமான நிலையங்கள், சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்கள் கிடைக்கின்றன. அம்பானி, தனது லேப்டாப்பை கொண்டு வர, வெளிநாட்டில் இருந்து லேப்டாப் இறக்குமதிகளை நிறுத்துமாறு மத்திய அரசை வற்புறுத்துகிறார். அதானியைப் பற்றி ஹிண்டர்பக் கொடுத்த அறிக்கை தொடர்பாக மத்திய அரசு இதுவரை எந்த தகவலையும் சொல்லவில்லை” என்று கூறினார்.