இந்தியாவில் கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இருப்பினும் கரோனா மூன்றாவது அலை ஏற்படும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்தநிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே. பால், சுற்றுலா தளங்களில் கூட்டமாக மக்கள் குவிவது குறித்தும், கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்தும் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
இதுதொடர்பாக டாக்டர் வி.கே. பால், "நமது பாதுகாப்பை நாம் குறைத்துக்கொள்ள முடியாது. சுற்றுலா தலங்களில் ஒரு புதிய ஆபத்து காணப்படுகிறது, அங்கு மக்கள் கூட்டம் காணப்படுகிறது. சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட நெறிமுறைகள் பின்பற்றப்படவில்லை. இது தீவிர கவலைக்குரிய விஷயம்" என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர், "கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான வழிகாட்டுதல்கள் சுகாதார அமைச்சகத்தினால் வெளியிடப்பட்டுள்ளன. கர்ப்பிணி பெண்களுக்கு செலுத்த மூன்று தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்காட்டுள்ளது. கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவேண்டும். இது மிகவும் முக்கியம்" என கூறியுள்ளார்.
மேலும் லாம்ப்டா வகை கரோனா குறித்த கேள்விக்கு பதிலளித்த வி.கே.பால், "லாம்ப்டா வகை கரோனா கண்காணிக்கப்படவேண்டிய வகையை சேர்ந்தது. நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த வகை கரோனா இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது என்பதற்கு இதுவரை எந்த ஆதாரமும் இல்லை" என தெரிவித்துள்ளார்.