லவ் ஜிகாத்துக்கு எதிரான சட்டம் மஹாராஷ்ட்ர மாநிலத்தில் இயற்றப்படுமா என்ற கேள்விக்கு சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் பதிலளித்துள்ளார்.
திருமணத்திற்காக மட்டும் மதம் மாறுவது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என அலகாபாத் உயர் நீதிமன்றம் அண்மையில் தெரிவித்திருந்தது. மேலும், அவ்வாறு திருமணத்தின்போது மதம் மாறுவது செல்லாது எனவும் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசம், ஹரியானா, கர்நாடகா, மத்தியப்பிரதேசம் போன்ற பாஜக ஆளும் மாநிலங்கள் லவ் ஜிகாத்தை தடுக்க விரைவில் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என அறிவித்திருந்தன. அதன்படி, லவ் ஜிகாத்தை தடுக்கும் சட்டத்திற்கான பரிந்துரையைத் தயார் செய்துள்ள உத்தரப்பிரதேச உள்துறை அமைச்சகம், அதனை உத்தரப்பிரதேச சட்ட அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.
இந்நிலையில் மஹாராஷ்ட்ர மாநிலத்தில் இந்த சட்டம் இயற்றப்படும் என்ற கேள்விக்குப் பதிலளித்துள்ள சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத், "'லவ் ஜிகாத்' சட்டம் தொடர்பாக ஏராளமான விவாதங்கள் நடந்து வருகின்றன. இது ஒரு தீவிரமான விஷயம் என்று நான் நினைக்கிறேன். மேற்கு வங்க தேர்தல்கள் வரப்போகின்றன, எனவே புதிதாக எதாவது ஒரு விஷயத்தை முன்னிறுத்த வேண்டுமல்லவா..? இந்த தேர்தலில், மக்களின் வளர்ச்சிதான் முக்கிய பிரச்சனை என்று நாங்கள் நம்புகிறோம், ஆனால் லவ் ஜிகாத் குறித்தும் விவாதிக்கப்படும். மகாராஷ்ட்ராவிலும் சிலர் இந்த பிரச்சனையை எழுப்புகிறார்கள், நாங்கள் எப்போது இதற்கான சட்டத்தைக் கொண்டு வருவோம் என்று கேட்கிறார்கள். நான் இன்று முதல்வருடன் பேசினேன், பீகாரில் நிதிஷ்குமார் இந்த சட்டத்தைக் கொண்டுவரட்டும், நாங்கள் அதை ஆராய்ந்து பின்னர் அதைப் பற்றிச் சிந்திப்போம்" எனத் தெரிவித்துள்ளார். பீகார் மாநிலத்தில் இந்த சட்டத்தை இயற்றவேண்டும் என பாஜக தரப்பில் தெரிவித்துவரும் சூழலில், இதுதொடர்பாக நிதிஷ்குமார் தரப்பு இதுவரை எந்த பதிலும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.