நாட்டின் 76வது குடியரசு தின விழா இன்று (26.01.2025) கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. இதனையொட்டி டெல்லியில் குடியரசு தின விழா களைக்கட்டியுள்ளது. அந்த வகையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் இந்தோனேசியா அதிபர் பிரபோவோ சுபியாண்டோ ஆகியோர் குடியரசுத் தலைவரின் மெய்க்காப்பாளர்கள் உடன் குதிரை வண்டியில் கடமைப் பாதைக்கு வந்தனர். அப்போது பிரதமர் மோடி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் இந்தோனேசியா அதிபர் பிரபோவோ சுபியாண்டோ ஆகியோரை வரவேற்றார்.
அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 21 குண்டுகள் முழங்க மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் பாதுகாப்பு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டார். இவ்விழாவின் ஒரு பகுதியாக நாட்டின் பன்முகக் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் அலங்கார ஊர்திகள், முப்படைகளின் வாகன அணிவகுப்பு, விமானப்படையின் சாகசங்கள் மற்றும் ராணுவ பலத்தை பறைசாற்றும் ஆகியவை நடைபெற்று வருகின்றன. இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், அதிகாரிகள், மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவிற்கு வெளிநாட்டுத் தலைவர்கள் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுவதும் வழக்கமாக உள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் இந்தோனேசியா அதிபர் பிரபோவோ சுபியாண்டோ சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டுள்ளார். முன்னதாக நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த போர் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக பிரதமர் மோடி தேசியப் போர் சின்னத்திற்கு வருகை தந்தார். அப்போது அவரை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்றார். அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி தேசியப் போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் முப்படைகளின் தளபதிகள், மத்திய அமைச்சர்கள் உடன் இருந்தனர்.