இந்தியாவின் தேசிய மலர் தாமரையா என கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய இணையமைச்சர் நித்யானந்த ராய் பதிலளித்துள்ளார்.
தாமரை இந்தியாவின் தேசிய மலர் என பலரும் நினைத்துக்கொண்டிருக்கும் நிலையில், இதுகுறித்து தெளிவுபடுத்த வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து மக்களவையில் நேற்று மத்திய இணை அமைச்சர் நித்யானந்த ராய் பதிலளித்தார்.
அப்போது பேசிய அவர், "சுற்றுச் சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் துறை அமைச்சகம் கடந்த 2011 ஆம் ஆண்டு புலியை இந்தியாவின் தேசிய விலங்காக அங்கீகரித்து தேசிய விலங்கு அந்தஸ்து வழங்கியது. அதேபோல, தேசிய பறவையாக மயில் அங்கீகரிக்கப்பட்டு, அதற்கு தேசிய பறவை அந்தஸ்து வழங்கப்பட்டது. ஆனால், அந்த அமைச்சகத்தின் சார்பில் தேசிய மலர் என்ற அந்தஸ்து இதுவரை எந்த மலருக்கும் அளிக்கப்படவில்லை. அதற்கான எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை. எனவே தாமரை இந்தியாவின் தேசிய மலர் இல்லை" என தெரிவித்தார்.