மத்தியப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள மத நகரங்களில் அனைத்து மதுபான விற்பனை தடை விதிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ம.பி முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளதாவது, “போதை பழக்கம், குறிப்பாக மது அருந்துதல், குடும்பங்களை அழிக்கிறது என்பதை நமது விளையாட்டு வீரர்கள் கூட அறிவார்கள். மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் அனைவருக்கும் தெரியும். நமது இளைஞர்கள் நாட்டின் எதிர்காலம் என்பதால், அவர்கள் கெட்டுப்போவதை நாங்கள் விரும்பவில்லை.
எனவே, இன்று ஒரு முக்கியமான முடிவை எடுக்கப் போகிறோம். நமது மாநிலத்தின் 17 மத நகரங்கள் மற்றும் நகரங்களில் அனைத்து வகையான மதுபானங்களும், முற்றிலுமாக தடை செய்யப்படும். இது நமது அரசாங்கத்தை நடத்துவதற்கான உறுதிமொழிகளுக்கு ஏற்ப உள்ளது” என்று அறிவித்தார்.
உஜ்ஜைன், அமர்கண்டக், மகேஷ்வர், ஓர்ச்சா, ஓம்காரேஷ்வர், மண்டலா, முல்தாய், மண்டலா (நர்மதகாட்), ஜபல்பூர், சித்ரகூட், மைஹார், சல்கன்பூர், மண்டலேஷ்வர், மண்டல்சௌர், பர்மன் மற்றும் பன்னா ஆகிய 17 நகரங்கள் மத்தியப் பிரதேசத்தில் அடுத்தடுத்து வந்த அரசுகளால் புனித மத நகரங்களாக வகைப்படுத்தப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.