Published on 01/05/2020 | Edited on 01/05/2020
![reliance to cut pays for employees](http://image.nakkheeran.in/cdn/farfuture/zqvEroF7srumf4it2dkrN3J3eDZ2vTUaMdq4mzWWGu8/1588332984/sites/default/files/inline-images/fsfs.jpg)
கரோனாவால் ஈடுபட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்கும் பொருட்டு தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 10 முதல் 50 சதவீதம் வரை ஊதிய குறைப்பு செய்யப்பட உள்ளதாக ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும் முடங்கியுள்ள சூழலில், சிறு நிறுவனங்கள் முதல் கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை அனைத்து துறைகளை சார்ந்த பல்வேறு தொழில் நிறுவனங்களும் இறங்குமுகத்தில் காணப்படுகின்றன. இந்த எதிர்ப்பாரா நிதி நெருக்கடி நிலையை சமாளிக்க நிறைய நிறுவனங்கள் சம்பள குறைப்பு மற்றும் ஆட்குறைப்பில் ஈடுபட்டு வருகின்றன. அந்தவகையில், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தனது இழப்புகளை சமாளிக்கும் நோக்கில் தங்களது நிறுவன ஊழியர்களுக்கு 10 முதல் 50 சதவீதம் வரை ஊதிய குறைப்பை அறிவித்துள்ளது.
இது குறித்து ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குனர் ஹிட்டல் மெஸ்வானி கூறும்போது, "சுத்திகரிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் பெட்ரோலிய பொருட்களின் தேவை கணிசமான அளவு குறைந்துள்ளதால் ஹைட்ரோ கார்பன் வணிகம் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. இந்த பாதிப்பை சரிக்கட்ட நிர்வாக இயக்குநர்கள், மூத்த இயக்குநர்களின் சம்பளமானது 30 சதவீதத்திலிருந்து 50 வரை குறைக்கப்படும். ஆண்டுக்கு 15 லட்சம் ரூபாய்க்குக் கீழ் ஊதியம் பெறுபவர்களுக்கு ஊதிய குறைப்பு எதுவும் இருக்காது. மேலும், போனஸ், ஊக்கத் தொகை உள்ளிட்ட சலுகைகள் நிறுத்தி வைக்கப்படுகிறது" எனத் தெரிவித்துள்ளார். அதேபோல அந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி அடுத்த ஒரு வருடத்திற்கு தனக்கு ஊதியம் வேண்டாம் எனக் கூறியுள்ளார்.