ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் நீட், ஜே.இ.இ. உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் போட்டித் தேர்வு பயிற்சிகளை தனியார் பயிற்சி நிறுவனங்களின் மூலம் பயிற்சி பெற்று வருகின்றனர். மேலும், ராஜஸ்தான் மாநிலம் மட்டுமல்லாது மகாராஷ்டிரா, பீகார், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து இங்கு பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த மாவட்டத்தில் உள்ள பயிற்சி மையங்களில் பயிற்சி பெரும் மாணவர்கள் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் நிலை அதிகரித்து உள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் இங்கு பயிலும் 15 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த வேளையில், இந்து ஆண்டில் தற்போது வரை 23 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகின்றன. அதிலும் நேற்று முன் தினம் மட்டும் தொடர்ந்து இரண்டு மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இங்கு உள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில் படித்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த 16 வயது மாணவர் ஒருவர் பயிற்சி மையத்தில் நடைபெறும் வாராந்திர தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் ஆறாவது மாடியிலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அதேபோல், பீகார் மாநிலத்தை சேர்ந்த 18 வயதான மாணவர் ஒருவர் குறைந்த மதிப்பெண் பெற்றதால், அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இப்படி அடுத்தடுத்து தொடரும் தற்கொலைகளை தடுக்கும் விதமாக கோட்டா மாவட்ட நிர்வாகத்தில் உள்ள அனைத்து பயிற்சி மையங்களிலும் அடுத்த இரண்டு மாதத்திற்கு எந்தவித தேர்வும் நடத்தக்கூடாது என்று ராஜஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், மாணவர்கள் தாங்கும் விடுதிகளில் ஸ்ப்ரிங் வடிவிலான மின்விசிறிகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவை பயிற்சி மையங்களுக்கு கோட்டா மாவட்ட கலெக்டர் அனுப்பியுள்ளார். அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு மனரீதியான ஆதரவு அளிக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதற்கிடையில், ஜெய்ப்பூரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மகேஷ் ஜோஷி, "கோட்டா மாவட்டத்தில் உள்ள பயிற்சி மையங்களில் படிக்கும் மாணவர்களுக்கு படிப்பு தொடர்பான அழுத்தம் இருப்பது உண்மைதான். தங்களுக்காக பெற்றோர் பெற்றுள்ள கல்விக் கடன் தொடர்பான மன அழுத்தத்தில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். தங்கள் குழந்தைகளின் கல்விக்காக பெற்றோர் கல்விக்கடன் வாங்க தேவை இல்லாத வகையில் ஒரு கொள்கையை மத்திய அரசு உருவாக்க வேண்டும்" என்று கூறினார்.