ராஜஸ்தானில் கடந்த 2018 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்த சூழலில், அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் மற்றும் துணை முதல்வர் சச்சின் பைலட் ஆகியோருக்கு இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்த சூழலில், சில தினங்களுக்கு முன்பு ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சச்சின் பைலட் ஆதரவாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து 30 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தனக்கு இருப்பதாக கூறும் சச்சின் பைலட், தனது ஆதரவாளர்களுடன் இணைந்து காங்கிரஸ் கட்சிக்கு கொடுத்துவந்த ஆதரவைத் திரும்பப்பெறுவார் என தகவல்கள் வெளியாகியது. ஆனால் எதிர்பாராத திருப்பமாக அவரை கட்சியில் இருந்தும், துணை முதல்வர் பதவியில் இருந்தும் காங்கிரஸ் கட்சி நீக்கியது. மேலும் தான் பாஜகவுக்கு செல்ல மாட்டேன் என்று அவரே தன்னுடய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுக்காலமாக சச்சின் பைலட் தன்னிடம் பேசியதில்லை என்றும் முதல் நாளிலிருந்து தனது அரசாங்கத்தை கவிழ்க்க பைலட் சதி செய்தார் என்றும் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.