பாஜக எம்எல்ஏ ஒருவர் ராம நவமி பண்டிகையின் போது ராமர் சிலை மீது ஏறி மாலை அணிவித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டத்தில் உள்ள பசவ கல்யாண் சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏவாக இருப்பவர் சரணு சாலாகர். பாஜகவை சேர்ந்த இவர் ராம நவமி பண்டிகையின் போது அப்பகுதியில் உள்ள சுமார் 12 அடி உயரம் கொண்ட ராமர் சிலைக்கு தனது ஆதரவாளர்களுடன் மாலை அணிவிக்கச் சென்றுள்ளார். அப்போது பாஜக எம்எல்ஏ சரணு சாலாகர் ராமர் சிலையின் மீது ஏறி நின்று சிலைக்கு மாலை அணிவித்துள்ளார். மேலும் ராமர் சிலை மீது நின்று கொண்டு போட்டோவிற்கு போஸ் கொடுத்த பிறகு சிலையின் மீது இருந்து கீழே இறங்கி வந்துள்ளார். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இது தொடர்பான வீடியோக்களை காங்கிரஸ் கட்சியினர் தங்களது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு, பாஜகவினர் ராமருக்கு அளிக்கும் மரியாதை இதுதானா என கேள்வி எழுப்பி உள்ளனர். தற்போது இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.